சென்னை: வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் பள்ளிகளில் அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகளின் உறுதித்தன்மையை முழுமையாக ஆய்வு செய்வதுடன் மொட்டை மாடி மற்றும் மேற்கூரைகளில் உள்ள மழைநீர் வடிகால் குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கவேண்டும்.
சேதமடைந்த அல்லது விரிசல் விழுந்த சுற்றுச்சுவர்கள்அருகே மாணவர்கள் செல்லாதவாறு முள்வேலிகள், தடுப்புகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.
மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெற்று உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
கட்டுமானப் பணிக்காக தோண்டப்படும் ஆழமான குழிகள் மற்றும் பள்ளங்களை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும்.
திறந்தவெளி கிணறுகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை கான்கிரீட் அல்லது இரும்பு மூடிகளைக் கொண்டு மூடி பூட்டி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.