திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து ஓசூருக்கு விற்பனைக்காக பேருந்துகளி்ல் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகள்.
ஓசூர்: ஓசூர் பகுதியில் நாட்டுக்கோழி இறைச்சிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப் பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனுடன், கால்நடை வளர்ப்பையும் விவசாயிகள் சார்பு தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, வீடுகளில் நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வருகின்றனர்.
தற்போது, நாட்டுக்கோழி இறைச்சிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, கரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொதுமக்கள் நாட்டுக்கோழி இறைச்சியை அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முன்பு உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ நாட்டுக்கோழி இறைச்சி ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, ஆட்டிறைச்சிக்கு இணையாக ஒரு கிலோ நாட்டுக்கோழி இறைச்சி ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, தேவை அதிகரித்துள்ளதால், திருப்பத்தூர், மேட்டூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் நாட்டுக்கோழிகளை வாங்கி வந்து ஓசூரில் விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கறிக்கோழி இறைச்சியைவிட நாட்டுக்கோழி இறைச்சியைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால், நாட்டுக்கோழி இறைச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, கிராமப்புற விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேவை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நாட்டுக்கோழிகளை வாங்கி வந்து சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவும் நாட்டுக் கோழிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
ஓசூர் பகுதியில் விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமாக இருந்தாலும், போதிய ஆலோசனையின்றி வளர்க்கப்படும் கோழிகள் கோடை காலங்களில் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துவிடுகின்றன. எனவே, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்க வேண்டும், என்றனர்.