சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வை தமிழகம் முழுவதும் 1,082 பேர் எழுதினர். இதற்கான தமிழ் தகுதித்தாள் தேர்வு மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஃபாரஸ்டர் உள்ளிட்ட பதவிகளில் 80 காலியிடப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நேற்று காலை நடந்தது. விரிவாக விடையளிக்கும் வகையில் நடத்தப்பட்ட இத்தேர்வை 1,082 பேர் எழுதினர்.
சென்னையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணா கல்லூரி ஆகிய 3 மையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 364 பேர் தேர்வெழுதினர். இவர்களுக்கான கட்டாயத் தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இத்தேர்வு கடந்த பிப்.8-ம் தேதி பிற்பகலிலும், அதே நாளில் காலை குரூப்-2ஏ முதன்மைத் தேர்வும் பிற்பகல் கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வும் நடைபெற இருந்தன. ஆனால், காலையில் நடத்தப்பட்ட குரூப்-2ஏ முதன்மைத் தேர்வில் சென்னையில் ஏற்பட்ட தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடி காரணமாக குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.