பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி குமரங்கனப்பள்ளி கிராமத்தில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி, டிராக்டர் டேங்கர் மூலம் நெல் வயலுக்குப் பாய்ச்சும் விவசாயி.

 
தமிழகம்

பர்கூர் பகுதியில் தண்ணீரை விலைக்கு வாங்கி நெற்பயிர்களை காப்பாற்றும் விவசாயிகள்

நிலத்தடி நீர்மட்டம் சரிவு

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பர்கூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரிவடைந்துள்ள நிலையில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் மானாவாரி, ஆற்றுநீர், கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மூலம் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தென்பெண்ணை ஆற்றுப் பாசனத்தின் கீழ் கெலவரப்பள்ளி, சின்னாறு, கிருஷ்ணகிரி அணைகள், பாரூர் ஏரி, பாம்பாறு அணை உள்ளிட்ட நீராதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதேபோல், நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் 9,009 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

கரடு முரடான மலைக் குன்றுகள், மலைப்பாங்கான நிலப்பரப்புகள் மற்றும் சமவெளிப் பகுதிகளைக் கொண்ட பர்கூர் பகுதியில் மழையை நம்பிய மானாவாரி நிலப்பரப்பு அதிகமாக உள்ளது. அதேநேரத்தில், நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு பல விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பர்கூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால், நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்ட பயிர் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பூமிக்குள் இறங்கும் மழைநீரின் அளவைவிட உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளதால், திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு வருகின்றன. தற்போது போதிய மழையின்மை மற்றும் வானிலை மாற்றங்களால் திறந்தவெளிக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனர்.

இதனால், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, பர்கூர் ஊராட்சி ஒன்றியம், மல்லப்பாடி ஊராட்சி, குமரங்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோகன் மற்றும் சில விவசாயிகள் கூறியதாவது: பர்கூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் மழையை நம்பி சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நிலவும் கடும் வெயில் மற்றும் மழையின்மை காரணமாக கிணறுகளில் தண்ணீர் முற்றிலும் வறண்டுவிட்டது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் நிலையில் உள்ளன. ஆனால், தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காயத் தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே கடன் வாங்கி நெல் நடவு செய்துள்ள நிலையில், நெற்பயிர்களைக் காப்பாற்ற ஒரு டிராக்டர் டேங்கர் தண்ணீரை ரூ.700-க்கு விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இதனால் உற்பத்திச் செலவு இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும், தண்ணீரின்றி வயல்கள் வறண்ட நிலையில் உள்ளதால், பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி வருகின்றன.

இதனால் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நீரின்றி காய்ந்த நெற்பயிர்கள் குறித்து கணக் கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி குமரங்கனப்பள்ளி கிராமத்தில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி, டிராக்டர் டேங்கர் மூலம் நெல் வயலுக்குப் பாய்ச்சும் விவசாயி.

SCROLL FOR NEXT