கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. காவிரி ஆற்றுக்கும், அரசலாற்றுக்கும் இடையே அமைந்துள்ள இந்தத் தொகுதியில் நெல், கரும்பு ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இத்தொகுதியில் வன்னியர், சவுராஷ்ட்ரா, முக்குலத்தோர், பிராமணர் உள்ளிட்ட சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு இதுவரை நடைபெற்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலா 7 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன.
கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் 96,057 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தர் வாண்டையார் 74,674 வாக்குகள் பெற்று 21,383 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
நாதக வேட்பாளர் ஆனந்த் 12,480 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பாலமுருகன் 6,523 வாக்குகளும், மநீம வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 5,276 வாக்குகளும் பெற்றனர். இந்த தொகுதி 1996 முதல் தொடர்ந்து திமுக வசமே உள்ளது. அதாவது 6 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
இதில், மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, தற்போதைய எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் தொடர்ந்து தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் பாஜகவின் தாமரை சின்னத்தில் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்த், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வினோத் ரவி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று, தற்போது 4-வது முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் கடந்த 15 ஆண்டுகளாக தொகுதியில் செய்த பணிகள் மற்றும் அரசின் சாதனைகளை கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்.
தமாகா வேட்பாளர் அசோக்குமார் தனது பிரச்சாரத்தில், கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட கால கனவான புதிய மாவட்டம் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டதாகவும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்.
இதேபோல, தவெக, நாதக வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு திமுக, தமாகா இடையே தான் போட்டி பிரதானமாக உள்ளது. தொடர்ந்து 7-வது முறையாக தொகுதியை திமுக தக்க வைத்துக் கொள்ளுமா? தமாகா தட்டிப் பறித்து தடம் பதிக்குமா? என்பதை மே 4-ல் பார்க்கலாம்.
மக்களின் எதிர்பார்ப்புகள்
* 25 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையான கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டும்.
* கும்பகோணத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.
* தாராசுரம்- கிருஷ்ணாபுரம் சுற்றுச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
* கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், காவிரியில் தடுப்பணை கட்டப்பட்டும் பலனில்லாமல் உள்ளது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* 2028 மாசி மகாமக விழாவையொட்டி பணிகளை கண்காணிக்க கும்பகோணத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1952 - வரதன் - காங்கிரஸ்
1957 - சம்பத் - காங்கிரஸ்
1962 - ராமசாமி - காங்கிரஸ்
1967 - காசிராமன் - காங்கிரஸ்
1971 - காசிராமன் - காங்கிரஸ்
1977 - ராதா - அதிமுக
1980 - பக்கீர்முகம்மது - காங்கிரஸ்
1984 - கிருஷ்ணமூர்த்தி - காங்கிரஸ்
1989 - கோசி.மணி - திமுக
1991 - ராமநாதன் - அதிமுக
1996 - கோசி.மணி - திமுக
2001 - கோசி.மணி - திமுக
2006 - கோசி.மணி - திமுக
2011 - அன்பழகன் - திமுக
2016 - அன்பழகன் - திமுக
2021 - அன்பழகன் - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை:
ஆண்கள் - 1,22,383
பெண்கள் - 1,29,469
மூன்றாம் பாலினத்தவர் - 16
மொத்தம் - 2,51,868