தூத்துக்குடி: இந்தியாவின் முதல் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையம், இம்மாத இறுதிக்குள் சேவையைத் தொடங்கும் என தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியிருப்பதாவது: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ம் தேதி திறந்து வைத்தார்.
சர்வதேச கப்பல் நிறுவனங்கள், மெத்தனால் எரிபொருளில் இயங்கும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இத்துறையில் வளர்ந்துவரும் புதிய சந்தையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகமும் தனது பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை இதன்மூலம் பெற்றுள்ளது.
இச்சேவை தொடங்கப்படும்போது, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் சேவையை வழங்கும் ஒரே துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழும். இந்த சேவையில் தலா 750 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை வழியாக டேங்கர் லாரிகள் அல்லது கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் மெத்தனாலை சேமிப்புத் தொட்டிகளில் இருந்து கப்பல்களுக்கு எரிபொருளாக வழங்கும் வகையில், சேமிப்புப் பகுதியையும், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் துறைமுகத் தளத்தையும் இணைத்து 2.8 கிலோ மீட்டர் நீளமுள்ள குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சேவையைத் தொடங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டபூர்வ நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இச்சேவையை நடத்துவதற்கு பொருத்தமான நிறுவனத்தை தேர்வு செய்ய விருப்பம் தெரிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் கப்பல்களுக்கு பசுமை மெத்தனால் எரிபொருள் வழங்கும் சேவை தொடங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.