தமிழகம்

“லஞ்சம் கேட்டால், கொடுக்காதீர்கள்” - முதல்வர் விஜய் கருத்துக்கு அமோக வரவேற்பு

செய்திப்பிரிவு

‘‘உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறன். இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால், இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜியோட ஆட்சி என்று உறுதியாக சொல்லுங்கள். மக்களே... நீங்கள் கூட இருக்கும்போது லஞ்சம், ஊழல் கூடஇல்லை. அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடும் யாராக இருந்தாலும் அடங்கி விடுவார்கள். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்’’.... கரூரில் நேற்று முன்தினம் நடந்த ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் இப்படிப்பேசினார்.

அவரது கருத்துக்கு தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், சங்கத் தலைவர்கள், இல்லத்தரசிகள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கருத்துக்களின் தொகுப்பு இங்கே...

ஏ. மாரியப்பன் (மளிகை கடை உரிமையாளர், நெல்லை): நல்ல விஷயம் தான். ஆனால், முதல்வர் கூறியதை வைத்து உடனடியாக நாம் துணிவாக செயல்பட முடியாது. நமக்கு தேவையான காரியத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறும்போது, அந்த அதிகாரி நம்மிடம் லஞ்சம் எதிர்பார்ப்பவராக இருப்பாரானால் நம்மை அலைக்கழிப்பார்கள். முதல்வர் கூறியிருப்பதால் கொஞ்சம் மாற்றம் வரலாம்.

அ.ரஞ்சனி கண்ணம்மா (வழக்கறிஞர், கோவில்பட்டி): ஊழல் அடியோடு ஒழியவில்லை. மேல்மட்டத்தில் இருந்து முதல்வர் பார்ப்பதால் அவருக்கு அப்படி தெரிகிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அவரது கட்சியின் மீதே விமர்சனங்கள் வந்துள்ளன. இவற்றுக்கு பதில் சொல்லாமல், பொத்தாம்பொதுவாக ஊழல் ஒழிந்துவிட்டது என கூறுவது தன்னை தானே ஏமாற்றிக்கொள்வது, மக்களை ஏமாற்றுவதாகும்.

பொன்னரசி (வேலூர்): இதை சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும். ஒரே மாதிரியான டிரென்டிங்கில் போகாமல் முதல்வர் விஜய் தனி பாதையில் செல்கிறார். அந்த வகையில் முதல்வர் கூறியது சந்தோஷம்தான்.

ஆ.தனலட்சுமி, (குடும்பத் தலைவி, ஸ்ரீவில்லிபுத்தூர்): முதல்வரின் பேச்சு பொதுமக்களுக்கு நம்பிக்கையையும், அதிகாரிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்த முதல்வர், பல்வேறு துறைகளில் இருந்து கட்சி நிதி என்ற பெயரில் ஆளும் கட்சிக்கு சென்ற கமிஷனை நிறுத்தி அரசுக்கு வருவாயாக மாற்றி உள்ளார். அதேபோல் அரசு அலுவலகங்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ள லஞ்சத்தை முழுமையாக ஒழித்தால் அடித்தட்டு மக்களிடையே நம்பிக்கை அதிகரிக்கும்.

ரா.தேவிகா (குடும்பத் தலைவி, சிவகங்கை): பிறப்புச் சான்று முதல் இறப்பு சான்று வரை அனைத்து சேவைகளுக்கும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட தொகை லஞ்சமாக கேட்டு அதை குறைத்துக் கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். தற்போது முதல்வர் விஜய் கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரே இப்படி கூறியிருப்பதால் அரசு அதிகாரிகள் திருந்தினால் நல்லது. இல்லாவிட்டால் விஜய் திருத்திவிடுவார் என்று நம்புகிறோம்.

எம்.பிரகாஷ் (மதுரை): தமிழக முதல்வர் விஜய், அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. அரசு ஊழியர்களிடையே லஞ்சம், ஊழல் புரையோடி போய் கிடக்கிறது. எந்த அரசு திட்டங்களையும் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது. இதுவரை நடந்த ஆட்சிகளில் லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் அதே மனநிலையில் தான் இருக்கின்றனர். அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டால்தான் லஞ்சம் ஊழலை ஒழிக்க முடியும்.

ரா.பாவனா (கல்லூரி மாணவி, மதுரை): அரசு நலத்திட்டம் சார்ந்து ஒரு பயனாளியாக நான் அரசு அலுவலகம் சென்றபோது, அப்போதைய ஆவணத்திலுள்ள பெயருக்கும், தற்போதுள்ள ஆவணத்திலுள்ளபெயருக்கும் சிறு வித்தியாசம் இருப்பதால் குறிப்பிட்ட ஆவணங்களை கொண்டு வருமாறு கூறினர். பின்பு நீங்கள் அலையாமல் வேலை சுலபமாக முடிய அலுவலரிடம் ரூ.1000 பணம் கொடுத்தால் அவரே கச்சிதமாக முடித்துவிடுவார் என்றனர். பின்பு நானும் தகுந்த ஆவணங்களுடன் சென்றேன்.

அதைப் பெற்றுக்கொண்டு அலுவலர் என்னிடம் எதிர்பார்த்த பணத்தை கொண்டு சென்றபோதும் என்னிடம் பணம் வாங்கவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அரசியல் மாற்றம் நிகழ்ந்து தவெக அரசு பொறுப்பேற்றதில் லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களிடையே ஒரு அச்சம் உள்ளதை காண முடிந்தது. முதலில் பணம் கேட்டவர்கள், பின்பு வேண்டாம் என்றனர். தவெக அரசில் நிகழ்ந்த மாற்றத்தை என்னால் நேரடியாக காண முடிந்தது.

தேவி மாதேஸ்வரி மணி (சமூக ஆர்வலர், அரூர்): அரசு பணியில் உள்ளவர்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற உன்னத நோக்கத்தை மனதில் கொண்டு லஞ்சம், ஊழலை கைவிடவேண்டும்.அதற்கு பொதுமக்களும் தங்களது முறைகேடான செயல்களுக்காக அலுவலர்களை அணுககூடாது. சமீப கால அரசு அலுவலகங்களில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டுகளால் பெருமளவு லஞ்சம் வாங்குவது குறைந்திருப்பதை உணர முடிகின்றது

பாஸ்கரன் (கூலித் தொழிலாளி, சேலம்): ஒரு மாநில முதல்வரே லஞ்சத்தை ஒழிக்க வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது, இது மக்களிடையே வரவேற்பையும், தைரியத்தையும் வரவழைத்துள்ளது. மேல்மட்ட அளவில் லஞ்சம், ஊழல் ஓரளவுக்கு ஒழிந்ததாகவே கருதுகிறேன்.கீழ்மட்ட அளவில் அரசு அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும்.

ரவிசங்கர் (தனியார் நிறுவன தொழிலாளர், சேலம்): முதல்வர் விஜய்யின் பேச்சு வரவேற்கத்தக்கது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையில் தற்போது போதிய காவலர்கள் இல்லை. ஒவ்வொரு தாலுகாவிலும் லஞ்ச ஒழிப்பிற்கெனத் தனியாக ஒரு அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் புகார்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய ஒவ்வொரு அலுவலகத்திலும் ‘புகார் நோட்டு’ வைக்கப்பட வேண்டும்.

திருமாறன் (கல்லூரி பேராசிரியர், வேலூர்): முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.இதற்கான தனி தொடர்பு எண்ணை வெளியிட்டால் நன்றாக இருக்கும். அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பு எண்ணை வெளியிட வேண்டும். லஞ்சம் என்பதை அரசாங்கம் சொல்லிஒழிக்க முடியாது. அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால்தான் ஒழிக்க முடியும்.

எம்.தாரணி (இல்லத்தரசி, ஈரோடு) : அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் தராதீர்கள் நான் இருக்கிறேன் என எந்த முதல்வரும் இதுவரை வெளிப்படையாக அறிவித்ததில்லை. முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது அரசு எடுக்கும் உடனடி நடவடிக்கை வரவேற்கத்தக்கது.அரசு அலுவலகங்கள் அனைத்திலும் அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்றும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் புகார் அளித்தால் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்விகுமரன் (ஸ்ரீரங்கம் நகர் நலச்சங்கத் துணைத்தலைவர்): ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதுதான் யதார்த்த நிலை. முதல்வரை மாறுவேடத்தில் சென்று ஒவ்வொரு அரசு அலுவலகமாக போய் பார்க்க சொன்னால் அவருக்கே உண்மை நிலவரம் தெரிய வரும். நமக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் அதிகாரிகளுக்கு கொடுப்பதை கொடுத்துவிட்டு நமக்கு வேண்டியதை வாங்கி வரவேண்டும். அதைவிட்டுவிட்டு அதிகாரிகளிடம் சென்று சினிமாவில் வசனம் பேசுவதை போல முதல்வர் விஜய்யின் பெயரை சொன்னால் நாம் ஒழுங்காக வீடு வந்து சேரமுடியாது.

நா.லோகு (பீளமேடு, கோவை): கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு அதிகாரிகளோ, அமைச்சர்களோ, முதல்வரோ இதுவரை லஞ்சத்தை ஒழிப்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அறிவிக்கவும் முன்வரவில்லை. தற்போது தமிழக முதல்வர் கூறியிருப்பது இந்திய வரலாற்றிலேயே ஒரு முன்னோடி அறிவிப்பாகும். முதல்வரின் அறிவிப்பால் இனி அதிகாரிகள் லஞ்சம் கேட்கேவே யோசிப்பார்கள். லஞ்சத்தை ஒழிக்க பொதுமக்களும் முதல்வருடன் கைகோர்க்க வேண்டியது அவசியம்.

டி.மாலா (தனியார் பள்ளி முதல்வர், உடுமலைப்பேட்டை, திருப்பூர்): தமிழகத்தில் லஞ்சம் மாற்ற முடியாத ஒன்று. அது நாடி நரம்பெல்லாம் கலந்து புரையோடி போய்விட்டது என்ற கூற்றை தமிழக முதல்வர் விஜய் மாற்ற தொடங்கி இருக்கிறார். லஞ்சம் இன்றி பல அரசு அலுவலகங்களில் பணிகள் நடைபெற தொடங்கி இருப்பதே இதற்கு சாட்சி.

லஞ்சம் கொடுப்பது தப்பில்லை அதுவும் ஒரு ‘பார்மாலிட்டி’ ஆக இருந்த சூழல் சற்று மாறியுள்ளது. முதல்வர் தைரியமாக புகாரளிக்கச் சொல்லியிருப்பது வரவேற்புக்குரியது. சாதாரணப் பெண்களும் பயமின்றி புகார் செய்யும் வகையில் எளிமையான, ரகசியமான கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அரசு அறிமுகப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

எஸ்.பெருமாள் பிள்ளை (அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர், மருத்துவர்):யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள் என தமிழக முதல்வர் விஜய் பேசியது உண்மையில் நடப்பது கனவா அல்லது நனவா என்றே தெரியவில்லை. இதுவரையில் ரமணா, முதல்வன் போன்ற படங்களில் மட்டுமே ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் எதிராக பேசுவதையும், புரட்சி செய்வதையும் பார்த்திருக்கிறோம். விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழலுக்கு எதிராக உறுதியாக முழக்கமிட்டார்.

ஆட்சிக்கு வந்த பிறகு அதைவிட இன்னும் தீவிரமாக உள்ளார். உண்மையில் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் சரியான, தகுதியான, தரமான ஒருவரை தான் தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். 50 ஆண்டுகள் அல்லது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அதிசயத்தை, ஆட்சி மாற்றத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

எஸ்.முத்துக்குமார் (டூ வீலர் மெக்கானிக், உடுமலைப்பேட்டை) : நிலப் பட்டா மாறுதல், பத்திரப்பதிவு, நகராட்சி மற்றும் ஊராட்சி அனுமதிகள், வணிக உரிமங்கள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கு இன்னும் லஞ்சம் ஒரு எழுதப்படாத விதியாகவே நீடிக்கிறது. மாவட்ட வாரியாக இதற்கென பிரத்யேக கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, தவறு செய்யும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே லஞ்சத்தை வேரோடு அழிக்க முடியும்.

டி.சரண்யா (பாரதிபுரம், திருப்பூர்): தமிழக முதல்வர் விஜய் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தத்தது. தமிழக அரசு மக்களிடம் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்பதுதொடர்பாக போதிய அளவு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பூஜா பிரபு (சமூகசேவகி, சூளைமேடு, சென்னை): தமிழக முதல்வர் விஜய் லஞ்ச ஒழிப்பு குறித்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. சாதாரண மக்களின் அன்றாட பணிகளுக்கு லஞ்சம் தடையாக இருக்கக் கூடாது என்ற அவரது கருத்து எதார்த்தமானது. பணம் தராமல் ஆட்சியை பிடித்ததின் பலனை ஊழலற்ற ஆட்சி மூலம் நிலைநிறுத்த எண்ணுவது நல்ல தொடக்கமாகும். இது வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், லஞ்ச ஒழிப்புத்துறையை மேலும் வலுப்படுத்தி, குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குணவதி (தனியார் நிறுவன ஊழியர், சென்னை): ‘லஞ்சம் கேட்டு மிரட்டினால் என் பெயரைச் சொல்லுங்கள்’ என்று முதல்வர் விஜய் பேசியிருப்பது, சாமானிய மக்களுக்கு பின்னால் ஒரு முதல்வரே துணையாக நிற்கிறார் என்ற நம்பிக்கையை தந்துள்ளது. அரசு அலுவலகங்களில் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வார்த்தைகள் ஒரு தற்காப்பு அரணாக மாறும். பணம் தந்து மேலதிகாரிகளை சரிக்கட்டும் போக்கு இனி தமிழகத்தில் எடுபடாது என்று நம்புவோம்.

பா.சரவணன் (ஐடி ஊழியர், திருநீர்மலை): “லஞ்சம் கொடுக்காதீர்கள்; கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள்” என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், ஒவ்வொரு அரசுத் துறைக்கும் கட்டணமில்லா புகார் எண், ரகசிய விசாரணை, ஒரு வாரத்தில் நடவடிக்கை, இடைத்தரகர்கள் ஒழிப்பு, இ-சேவை, பத்திரப்பதிவு, மின்சாரம், குடிநீர் சேவைகளை முழுமையாக மின்னணு மயமாக்க வேண்டும்.

கு.வெங்கடேசன், (தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர்): முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். லஞ்சமில்லா அரசு அமைய வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்கு அரசுக்கு பக்கபலமாக இருப்போம். அதேபோல், கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய திட்டங்கள் தொடங்குவதற்கு பெறப்படும் லஞ்சத்தையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் அனைத்துவிதமான மட்டங்களிலும் லஞ்சமில்லாத நிலையை முதல்வர் விஜய் உருவாக்க வேண்டும்.

ஜே.ராபர்ட் (பொதுச்செயலாளர், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்): முதல்வர் விஜய்யின் அறிவிப்பு வரவேற்கக்கூடியதே. ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தைதான் அனைவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் தற்போதைய தவெக அரசின் பல்வேறு செயல்பாடுகள் பாராட்டக்கத்தக்கது. குறிப்பாக ஆசிரியர் இடமாறுதல் இம்முறை எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் வெளிப்படையாக நடைபெற்றுவருகிறது.கடந்த காலங்களில் நிர்வாக மாறுதல் பெயரில் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் அரங்கேறும். தற்போது அத்தகைய நிகழ்வுகள் அரங்கேறவில்லை.

த.அமிர்தகுமார்(தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர்): லஞ்சமில்லா நிர்வாகத்தை உருவாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை நாங்கள் முழுவதும் வரவேற்கிறோம். அதேநேரம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே லஞ்சம் வாங்குவதைப் போலவும், மற்றவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் போலவும் ஒரு மாயையை உருவாக்கி, ஒரு தரப்பை மட்டும் குறிவைப்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் குறை கூறாமல், அனைத்து மட்டங்களிலும் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு எங்களின் முழு ஆதரவு எப்போதும் இருக்கும்.

SCROLL FOR NEXT