சென்னை: வானிலை ஆய்வுகளின்படி, இந்த ஆண்டு தீவிர ‘எல் நினோ’ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால், அதன் பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிப்பதால் உருவாகும் எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது ஆகும். எல் நினோ நிகழ்வு பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும். கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயரும்போது அது தீவிர எல் நினோ என்று கருதப்படுகிறது.
வானிலை ஆய்வுகளின்படி, 2026-ம் ஆண்டு தீவிர எல் நினோ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைவாகப் பெய்யக்கூடும். மேலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என தெரிகிறது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிவியல் அடிப்படையில் முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையின் (TNDRRA) கீழ் பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டது. அந்த குழுவில் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், கடலோர வள மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக , அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை மையத் தலைவர் பேராசிரியர் எஸ்.கண்மணி, சென்னை ஐஐடி குடிசார் பொறியியல் துறை நீரியல் ஆய்வகப் பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுமைக் குழுவின் உறுப்பினரும், டபிள்யூஆர்ஐ இந்தியாவின் இயக்குநருமான அறிவுடைநம்பி அப்பாதுரை, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன ஆலோசகர் ரமேஷ் ராமச்சந்திரன், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடேசன், சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மூத்த மேலாளர் ஆர்.பிரதீப் ஜான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலத்தின் மழைப் பொழிவு, வறட்சி நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்தல், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல், முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், வறட்சி, வெள்ள அபாயங்களை குறைப்பதற்கான அறிவியல் அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் உருவாகக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்ள மாநில அரசின் தயார் நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளும்.
இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே எதிர்கொண்டு, மக்களின் உயிர், வாழ்வாதாரம், உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய பிரதிநிதி இல்லை: எல் நினோவின் தாக்கத்தை கண்காணிக்க தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழுவில் இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) பிரதிநிதி இல்லை. தமிழகத்தில் வளிமண்டலத்தைக் கண்காணிக்க பலூன் மூலம் தினமும் கருவிகளை பறக்கவிட்டு, வளிமண்டலக் காற்றின் அழுத்தம், ஈரப்பதம், திசை வேகம் உள்ளிட்ட தரவுகளை ஐஎம்டி சேகரிக்கிறது.
தமிழகத்துக்கென ஸ்ரீஹரிகோட்டா, சென்னையில் 2 இடங்கள், காரைக்கால், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ரேடார்களை நிறுவி அவற்றின் தரவுகளையும் சேகரித்து வருகிறது. தமிழகத்தில் 56 தானியங்கி வானிலை கருவிகள், 87 தானியங்கி மழைமானிகள், 11 வேளாண் வானிலை கருவிகள் என 154 இடங்களில் கருவிகளை நிறுவி தரவுகளை சேகரித்து வருகிறது. தமிழக அரசிடமோ, இப்போது குழுவில் இருப்போரிடமோ இத்தகைய கட்டமைப்பு வசதி இல்லை. அதனால் நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை சேர்ப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.