சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதியில் இருந்து ஒருவாரமாக கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.
அப்போது, சுகாதாரத் துறை செயலர், முதல்வரின் உத்தரவை பெற்று, நிதித்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஒப்புதல் உடன் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை ஏற்று கொண்ட அரசு மருத்துவர்கள், நேற்று நடத்த இருந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை என்றால், வரும் 28-ம் தேதி முதல் சென்னையில் 2 நாட்கள் முதல்வர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் முதல் கட்டமாக அடையாள உண்ணாவிரத போராட்டமும், தொடர்ந்து படிப்படியாக அறிவித்தபடி அடுத்தகட்ட போராட்டமும் நடத்துவது என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.