சிவகங்கை: தமிழகத்தில் அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்களை ரீசார்ஜ் செய்ய முடியாததால், ஆபரேட்டர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அரசு கேபிள் டிவி நிறுவனம் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 12 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு இலவசமாக செட் டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு, மாதம் ரூ.200 கட்டணத்தில் 200-க்கும் மேற்பட்ட சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தனியார் கேபிள் நிறுவனங்கள் மாதம் ரூ.250-க்கு மேல் கட்டணம் வசூலிப்பதால், மக்கள் அரசு கேபிள் டிவியையே விரும்புகின்றனர்.
மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு தேவையான செட் டாப் பாக்ஸ்கள் விநியோகம், சர்வர் பராமரிப்பை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக புதிதாக சேரும் சந்தாதாரர்களுக்கு செட் டாப் பாக்ஸ்களை பொருத்தி ரீசார்ஜ் செய்ய முடியவில்லை.
அதேபோல், சேவையை வேண்டாம் என்று சொல்வோருக்கு இணைப்பை துண்டிக்கவும் முடியவில்லை. இந்த பிரச்சினையால் பழுதடைந்த பாக்ஸ்களை கூட மாற்ற முடியவில்லை. இதேநிலை நீடித்தால், அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறியதாவது: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, செட் டாப் பாக்ஸ்கள் விநியோகம், சர்வர் பராமரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு நிலுவைத்தொகை இருந்ததால், அந்நிறுவனம் ஒளிபரப்பு சேவையை முடக்கியது. நீதிமன்ற உத்தரவையடுத்து, மீண்டும் சரிசெய்யப்பட்டது.
அதன் பின்னர், கடந்த சில ஆண்டுகளாக சிக்னல் பிரச்சினை இல்லாமல் அரசு கேபிள்டிவி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதனால், அரசு கேபிள் டிவி சந்தா தாரர் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது, மீண்டும் செட் டாப் பாக்ஸ்கள் விநியோகிக்கும் தனியார் நிறுவனத்துக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் முறையாக பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த நிறுவனம் சர்வரை முடக்கியதால், புதிதாக செட் டாப் பாக்ஸ்களை பொருத்தி ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. பழுதடைந்த பாக்ஸ்களை மாற்றித் தரவும் முடியவில்லை. அதேபோல், இணைப்பு வேண்டாம் என்று சொல்வோருக்கும் துண்டிக்க முடியவில்லை. துண்டிக்க முடியாவிட்டால், அதற்குரிய பணத்தை நாங்கள்தான் செலுத்த வேண்டும்.
இப்பிரச்சினை கடந்த ஒரு வாரமாக தொடர்வதால், அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மூடிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தனியார் நிறுவனத்தை நம்பாமல், அரசு கேபிள் டிவி தொழில்நுட்ப உதவியார்கள்மூலமே செட் டாப் பாக்ஸ் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.