சென்னை: உவகை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்,பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக டிட்கோ கொடுத்துள்ள முதல்கட்ட சாத்தியக் கூறுகளுக்கான அறிக்கையை பகுப்பாய்வு செய்து, விதுபாலா, ராஜதுரை, சந்திர குப்தா உள்ளிட்ட அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை டிட்கோ நிறுவனம் வழங்கியுள்ளது.
அந்த அறிக்கை எங்கள் நிறுவனம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளன. அதாவது, விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் சுமார் 26.5 சதவீதம் நீர்நிலைகள் உள்ளன. ஆனால், டிட்கோ அறிக்கையில் இயற்கையான ஈர நிலங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, இந்தப் பகுதியிலிருந்து வெளியேறிய உபரி நீர் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டால், மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீர் எங்கு செல்லும் என்ற தெளிவான திட்டம் அரசிடம் இல்லை.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மீண்டும் ஒரு பெரும் வெள்ளப் பாதிப்பை இது உருவாக்கும். நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பான இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக இத்திட்டம் அமைந்துள்ளது.
2017-ம் ஆண்டு சிஏஜி வெளியிட்ட அறிக்கையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களே சென்னையின் வெள்ளப் பாதிப்புக்கு முதன்மைக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, அதே தவறையே பரந்தூர் திட்டத்திலும் அரசு மீண்டும் செய்துள்ளது.
இந்நிலையில், விமான நிலையம் அமைய பரந்தூர் தகுந்த இடமா என்பது குறித்து சாத்தியக்கூறு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை மதிப்பிட தமிழக அரசு மாநில நிபுணர் குழுவை மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைத்தது.
ஆனால், அந்தக் குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, அந்த அறிக்கையை முழுமையாக பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட வேண்டும்.
நீரியல் மற்றும் வெள்ள மாதிரி ஆய்வுகளை முறையாக மேற்கொண்ட பின்னரே அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.