அமைச்சர் டி.கே.பிரபு

 
தமிழகம்

“கனிமவளம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு” - அமைச்சர் டி.கே.பிரபு தகவல்

இ.ஜெகநாதன்

திருப்புவனம்: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதற்கான தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும் என கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக கனிம வளங்கள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது. அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும்.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் தரமாகவும், குறைந்த விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய வாய்ப்பு இருந்தால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் எங்குமே மணல் கொள்ளை நடைபெறக் கூடாது என்பதே முதல்வரின் நோக்கம். கனிமவளக் கொள்ளை தொடர்பாக புகார்கள் வந்தாலோ, ஊடகங்களில் செய்திகள் வெளியானாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சீமைக்கருவேல மரங்களை அகற்றினாலும் மீண்டும் வளர்ந்து விடுகின்றன. இதனால் அகற்றும் பணியை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியநிலை உள்ளது. சீமைக்கருவேல மரங்களை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த அரசு திட்டம் வகுத்து வருகிறது.

மேலும், வைகை ஆற்றைத் சீரமைப்பது குறித்து நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்” என்று அவர் கூறினார்.

தீர்ப்பு சொல்வது என்ன?

முன்னதாக, தமிழகத்தின் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் போன்ற பணிகளுக்கு தேவையான கருங்கல், ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை மாதம் புதிதாக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு விதி 3-ஏ புதிதாக சேர்க்கப்பட்டது.

அதன்படி பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்கால் தவிர்த்து வெளி மாநிலங்களுக்கு கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் கடந்த அக்.26-ல் உத்தரவிட்டார்.

தமிழக அரசின் புதிய விதி சேர்ப்பு மற்றும் அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மது பிரேமநாதன் உள்ளிட்ட பலர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு, ‘தமிழக புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட விதி 3-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது’ என அறிவித்து அதை ரத்து செய்தனர். மேலும், அந்த விதியின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT