தமிழகம்

கனிம வளங்களின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு இலக்கு: ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ஊழல், முறைகேடுகளைத் தடுப்பதோடு, கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு முடிவெடுத் துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கனிமவளத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் முறைகேடுகள் காரணமாக கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை திறம்படவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் நீடித்த காலத்துக்கு பயன்படுத்துவதை, தமிழக அரசு உறுதி செய்யும்.

அரசு கருவூலத்துக்கு வரவேண்டிய வருவாய் வேறு வழிகளில் திசைமாறிச் செல்வதை தடுத்து அது முறையாக வந்து சேருவதை உறுதி செய்வதற்காக, முறையான ஒழுங்குமுறை மற்றும் அமலாக்கத்தின் மூலம் திட்டமிட்ட சட்டவிரோத கனிமத் தொழிலும், வரி ஏய்ப்பும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு கனிமங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

மேலும், இந்த அரசு பொறுப் பேற்ற உடன் தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயப் பெருமக்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனி நபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிப்பதற்கு வழிவகை ஏற்படுவதுடன், மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்புக்கும் உதவிகரமாக இருக்கும். இத்திட்டத்தின்கீழ் தற்போதுவரை 18,274 ஏரிகள் மற்றும் குளங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT