மதுரை: தமிழகத்தில் குதிரை பேரத்துக்கு ஆளுநரின் செயல்பாடே காரணம் என மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஏ.பெருமாள் குறித்த நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பங்கேற்று நூலை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் விஜய் தலைமையில் தொடங்கப்பட்ட ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்தக் கட்சியை மக்கள் ஏறக்குறைய தேர்ந்தெடுத்தே விட்டனர். ஆனால், அவர்களின் பெரும்பான்மைக்கு 11 இடங்கள் குறைவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியை அழைப்பது அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக இணைந்து, பெரும்பான்மை பலம் கொண்ட பல்வேறு கட்சிகளை ஆளுநர் அழைப்பதே மரபாகும்.
ஆனால், தமிழக பொறுப்பு ஆளுநர், காலத்தால் மெய்ப்பிக்கப்பட்ட இந்த ஜனநாயக மரபையும், நடைமுறையையும் பின்பற்றவில்லை. விஜய் தனது பெரும்பான்மையை எவ்வாறு நிரூபிக்கப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆளுநர் விரும்புகிறார். மரபுகளின்படி பார்த்தால், அது ஆளுநருக்குச் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.
90-களில் பாஜகவின் தலைவராக இருந்த வாஜ்பாய்க்கு பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. தனக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதை நிரூபிப்பதற்கான எண்ணிக்கை கூட, அவரிடம் அப்போது இருக்கவில்லை. ஆயினும், அவர் பிரதமராகப் பதவியேற்றார். அதுவே ‘13 நாள் அதிசயம்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர், அவர் பதவி விலக நேர்ந்தது.
அடுத்து, கர்நாடகாவில் ‘எஸ்.ஆர். பொம்மை வழக்கில்’ உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. ஒரு கட்சியின் அல்லது கூட்டணியின் பலம் சோதிக்கப்பட வேண்டிய இடம் ஆளுநர்மாளிகை அல்ல. சட்டப்பேரவையில் நடக்க வேண்டும் எனக் கூறியது. ஆனால், இந்த அடிப்படை நெறிமுறை, ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம்.
டில்லியின் ஆதரவு மற்றும் முயற்சிகளுடன், தமிழக மக்களின் தேர்தல் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் வகையிலான சில தந்திரமான நகர்வுகள் நடைபெறுவதாக எங்களுக்குத் தெரியவந்தது. அதாவது, என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக தலைமையில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சென்னையில் உள்ள அதிகார மையத்தில் ‘பின்வாசல் வழியாக’ சில தந்திரமான முயற்சிகள் நடப்பதாக தெரியவந்தது. எங்கள் கட்சியில் இதுகுறித்து விவாதித்தோம்.
தமிழக தேர்தல் தீர்ப்பின் உணர்வைச் சிதைக்கும் வகையிலும், பாஜகவின் கூட்டணிக் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் வகையிலும் நகர்வுகள் நடைபெறுவதால், மிகப்பெரிய ஒற்றைக் கட்சியான தவெக தலைமையில் அரசு அமைய ஆதரவு கடி தத்தை ஆளுநருக்கு தந்தோம். இந்த முடிவு தொடர்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து திமுக தலைமையை தொடர்புகொண்டு விளக்கம் அளிப்போம். நாங்கள் திமுகவுடனும் தொடர்பில் இருந்து வருகிறோம். குதிரை பேரம் தொடர்பான விவாதங்கள் எழுவதற்கு ஆளுநரின் செயல்பாடே காரணம். இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வின்போது மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேஷ், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.