சென்னை: மை பாரத்தின் தமிழகம், புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மை பாரத் சார்பில் 17-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி பிப்.19 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
காஞ்சி மாவட்டம் ஏனத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சியை பிப்.20-ம் தேதி (நாளை) ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் 200 இளைஞர்களுக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்விச் சுற்றுலாக்கள், தலைவர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் ஊக்கம், தன்னம்பிக்கை ஏற்படும்.
பழங்குடியின இளைஞர்கள் மத்தியில் இந்நிகழ்வு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது தேசிய ஒருமைப்பாடு, இளைஞர்களை உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு தேசிய முன்னோடி திட்டமாகும் என்றார்.