துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்
புதுச்சேரி: போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகள், குடோன்களை சிபிசிஐடி கண்டறிந்து சீல் வைத்து உரிமையாளர் ராஜா உட்பட 16 பேரை கைது செய்துள்ளது. மருந்து மாத்திரைகள் 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிதிருந்ததால் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் தொடங்கி ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவும் சிபிஐ விசாரணை கோரின. தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் துணைநிலை ஆளுநரிடம் மனு தந்தன. பல சமூக அமைப்புகளும் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆளுநரிடம் மனு தந்தும் நடவடிக்கை இல்லாததால் டெல்லி சென்று காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. பாஜக தரப்பில் பேரவைத் தலைவர் செல்வம், முதல்வர் நாராயணசாமி ஆட்சியில்தான் இந்த தொழிற்சாலைகளுக்கு உரிமம் தந்தனர் என்றும் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “எந்த விசாரணைக்கும் நான் தயார். அதேநேரத்தில் போலி மருந்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் விசாரணைக்கு தயாரா?” என்று கேட்டார்.
போலி மருந்து விவகாரம் கடும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை சிபிஐ (CBI) மற்றும் என்ஐஏ (NIA) அமைப்புகள் மேற்கொள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.