சென்னை: தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் எவ்வித மாற்றமும் இன்றி முழுமையாக வாசித்தார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அரசு தயாரித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சில தகவல்களை சேர்த்தும் வாசித்தார்.
அதன்பிறகு 2024, 2025, 2026-ம் ஆண்டுகளில் பேரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்து, தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இவ்வாறு கடந்த 4 முறையாகவே அரசு தயாரித்து அளித்த உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை.
இதற்காக தீர்மானம் கொண்டுவந்து, அரசு தயாரித்து அளித்த ஆளுநர் உரையே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் தற்போதைய பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தனது உரையை முழுமையாக வாசிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், நேற்றைய கூட்டத்தில் தமிழக அரசு தயாரித்த உரையை எவ்வித மாற்றமும் இன்றி ஆளுநர் அர்லேகர் முழுமையாக வாசித்தார். பதவியேற்பு விழாக்களில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, வந்தே மாதரம், தேசிய கீதத்தை தொடர்ந்து 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையானது.
இந்த நிலையில், ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று, கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதால், 4 ஆண்டுகால பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, ஆளுநர் அர்லேகர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவையில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று (ஜூன் 18) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டப்பேரவையில் வாசிக்கப் பெற்றது மனநிறைவைத் தருகிறது. முதல்முறையாக பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், நிறைவாகவும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழக அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டும் விதமாக இது அமைந்துள்ளது.
ஒரு ஜனநாயக ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையே நிலையான, முன்னுதாரணமான நோக்கமாகக் கொண்டு செயல் பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கி இருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.