ஜோதிமணி
சென்னை: ‘ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தீர்ப்புக்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை மக்கள் முதலமைச்சர் என்று முடிவு செய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்புக்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல.
ஆளுநருக்கு இந்த அளவுக்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். ஆளுநர் மாளிகை வழியாக பாஜக அரசியல் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அளித்த பேட்டி ஒன்றில், “பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அது குறித்த விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் அடிப்படையில் எனது செயல்பாடு இருக்கும்” என்று அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று மாலை 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த விஜய், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார். எனினும், அதில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.