கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், பொதுத்துறைச் செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை கூடுதல் செயலர் கே.பாலசுப்பிரமணியம், முன்னாள் படைவீரர் நல இணை இயக்குநர் மேஜர் சுரேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை: கொடிநாளை ஒட்டி கொடிநாள் நிதிக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நன்கொடை வழங்கினர். இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக ஆண்டுதோறும் டிச.7-ம் தேதி கொடிநாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் கொடிநாள் நிதிக்காக சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் நன்கொடை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நம் தேசத்தின் எல்லைகளைப் பாதுகாத்து நாட்டின் இறையாண்மையை உயர்த்திப் பிடித்துவரும் நம் ராணுவ வீரர்களுக்கு, கொடிநாள் வணக்கங்களை நாம் சிரம் தாழ்த்தி நன்றியுடன் தெரிவித்துக் கொள்வோம். நமது தேசத்தையும், மக்களையும் பாதுகாப்புடன் வைத்திருக்கும் தன்னலமற்ற சேவை, துணிவு, தியாகம் ஆகியவற்றை நினைவூட்டும் நாளே கொடி நாள் ஆகும்.
நிபுணத்துவம், வீரம், கடமையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு இந்திய ராணுவம் புகழ் பெற்றது. ராணுவத்தினரின் கொடிநாள் நிதிக்கு நிதி அளிப்பதன் மூலம் படைவீரர்களின் கண்ணியத்துக்கும் நலனுக்கும் நாம் துணை நிற்பதுடன், அனுபவம் மிக்க நம் முன்னாள் படை வீரர்களுக்கும் போரினால் கணவரை இழந்திருப்பவர்களுக்கும் நம்மால் உதவ முடியும். கொடிநாள் நிதியை முழுமனதுடன் தாராளமாக வழங்குமாறு தமிழ்நாட்டு மக்களை நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி லோக் பவனில் கொடி நாள் நிதிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தாயகம் காக்க தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆயுதப்படை கொடிநாளில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்.
மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: முப்படை வீரர்களின் வீரத்தைப் போற்றும் வகையிலும், போரில் தியாகம் புரிந்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் உதவும் வகையிலும், கொடி நாள் நிதிக்கான நன்கொடை அளித்தோம்.
நாட்டுக்குள் நாம் நல்வாழ்வு வாழ, தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி எல்லையைப் பாதுகாக்கும் படை வீரர்கள் நன்றிக்குரியவர்கள். பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம். படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.