தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் டிஎன்பிஎஸ்சி மூலமே பணி நியமனம்

சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக மட்டுமே நிரப்புவதற்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நேரடியாக நியமிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி கூடுதல் செயல் பணிகள் சட்டத்திருத்த மசோதா அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

 இந்நிலையில், இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக சட்டத்துறை செயலர் பி.சுமதி அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை உள்பட 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர், பணி மேற்பார்வையாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் உள்பட அனைத்து வகை பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படும்.

பதவி நிலைக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் குரூப்-4, குரூப்-2, 2ஏ தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுடன் சேர்க்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதுவரை, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி நியமனங்கள் அனைத்தும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு மூலம் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நகராப்புற உள்ளாட்சி  நேரடி பணிநியமனங்களும் டிஎன்பிஎஸ்சி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் குரூப்-4, குரூப்-2 மற்றும் குரூப்-2  ஏ தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT