புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை காலை ஆளுநர் உரையும், மதியம் பட்ஜெட் தாக்கலும் நடக்க இருக்கிறது.
புதுச்சேரியில், 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த மே 20-ம் தேதி பேரவைக் கூடத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் புதிதாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
பேரவைத்தலைவர் தேர்தல் நடத்த துணைநிலை ஆளுநருக்கு ஜூன் மாதம் கடிதம் அனுப்பியும் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. பேரவைத்தலைவர் பதவியை பாஜக கோரி வருகிறது. ஆனால் முதல்வர் ரங்கசாமி அதிமுகவுக்கு இப்பதவியை தர விரும்புவதால் இழுபறி நீடிக்கிறது.
வழக்கமாக பேரவைத்தலைவர் தேர்தல் நடத்தி தேர்வானவர் தலைமையில் ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் நடக்கும். தேர்தல் முடிந்து நூறு நாட்களாகியும் இதில் முடிவு ஏற்படவில்லை. அதனால், புதுச்சேரியில் முதல் முறையாக தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.
பட்ஜெட் கூட்டத்தை துவக்கி வைக்க துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவை வருகிறார். அவரை தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன் வரவேற்று இருக்கைக்கு அழைத்து செல்வார். அங்கு ஆளுநர் உரையாற்றுவார். அதைத்தொடர்ந்து அவரை வழியனுப்பிய பிறகு, அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் பேரவை நடக்கும் என்பதை முடிவு செய்யும்.
பின்னர் மதியம் 3 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இம்முறை மத்திய அரசானது புதுச்சேரிக்கு ரூ. 14,300 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தந்துள்ளது.