திருநெல்வேலி: 'பிஹார் மாடலில் தமிழகத்திலும் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணி அமைச்சரவை அமைய வேண்டும்' என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றில் தேவேந்திர குல வேளாளர்கள், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து கொடுப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது. அவர்களுக்கு குடிநீர், கழிவுநீரோடை, சாலை, பேருந்து வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படுவதில்லை.
மாநகராட்சி பகுதிகளில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 2 மாதமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படவில்லை. மலையிலிருந்து கீழே இறங்கி வந்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கூறுவதாக தெரிகிறது. இதுபோல் அப்பகுதிகளில் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து வசதியும் இல்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இது மறைமுகமாக அங்குள்ள மக்களை பட்டினிச்சாவுக்கு தள்ளும் முயற்சி.
இந்த போக்கை மாவட்ட நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டும். மனிதநேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை பெருமளவில் நடைபெற்று வருகிறது. ராதாபுரம், நாங்குநேரி, சங்கரன்கோவில் பகுதிகளில் கல்குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தேவையை பொருத்து கனிம வளங்களை வெட்டி எடுக்க வேண்டும். ஆனால், கேரளம், கர்நாடகம், மாலத்தீவு போன்றவற்றின் தேவைக்கு ஏற்ப இங்கே கல், மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இது தவறானது. ஆட்சியாளர்கள் தவறு செய்யும்போது அதிகாரிகளும் அதற்கு துணை போகிறார்கள்.
மாநில சுயாட்சி என்ற பெயரில் அனைத்து அதிகாரங்களும் தங்களுக்கு வேண்டுமென திமுக அரசு நினைக்கிறது. அனைத்து அதிகாரங்களும் இவர்களுக்கு கிடைத்தால் தமிழகத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வாழ முடியும். பெருமளவு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.
மத்திய அரசுக்கு எதிராக சிறு துரும்பையும் பெரிதாக்குவதே திமுகவின் அரசியல் உத்தியாக இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக குற்றம் சுமத்துவது மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உதவாது. திமுகவின் இந்த நிலைப்பாடு மக்கள் மத்தியில் எடுபடாது.
பிஹார் மாடலில் தமிழகத்திலும் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணி அமைச்சரவை அமைய வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் ஆட்சி அமைய வேண்டும். அதுபோன்ற ஆட்சி அமையும் என எதிர்பார்க்கிறேன். ஜனவரி மாதத்திற்கு பிறகு எங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.