இடது: முதல்வர் விஜய்| வலது: ரிக்கி ராதன் பண்டிட்

 
தமிழகம்

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு அரசுப் பதவி: காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கண்டனம்

வெற்றி மயிலோன்

சென்னை: முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முக்கியப் பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. தவெகவின் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களில் அறியப்பட்ட இவருக்கு, இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையில், ‘தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார். அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும். இதற்கான பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்துத் தனியாக அறிக்கை வெளியிடப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ‘அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.

அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல. இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.

சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் எம்.பி): 'எனக்கே புரியவில்லை. ஒரு ஜோதிடருக்கு ஏன் அரசு சிறப்பு அதிகாரி (OSD) பதவி வழங்கப்பட வேண்டும்? யாராவது விளக்க முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வன்னியரசு (விசிக சட்டப்பேரவைக்குழு தலைவர்): முதல்வருக்கு ஜோதிடர்: அறிவியலுக்கு புறம்பான நியமனத்தை திரும்பப் பெறுக. ஆஸ்தான ஜோதிடர்கள் என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. ஜனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், ‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ’தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

‘அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்’ ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது. அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. ’அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே ’தொழிலாக’ கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?

மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி ( காங்கிரஸ் எம்.பி): ‘பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள த.வெ.க.வின் அரசில் தனது ஜோதிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் நியமித்துள்ளதை முதல்வர் ஜோசப் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்ப்பது நல்லது’ எனத் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் எம்.பி): 'புதிய அரசாங்கமே. இதுவல்ல இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு. ஜோதிடம் தீர்மானிக்குமா நல்ல நிர்வாகத்தையும் வளர்ச்சியையும். அரசியலை அறிவியல் பூர்வமாக அணுகுங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT