காரைக்குடி: கனிமவளங்களை அரசே நேரடியாக விற்பனை செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான வங்கி கடனுதவிகளை கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமவளங்களை அரசே நேரடியாக விற்பனை
செய்வது குறித்த திட்டம் ஆய்வில் உள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். கனிமவளங்களை எடுத்துச் செல்லும் பணியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 10,000 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்களில் கனிமவளங்களை கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். ஜிபிஎஸ் பொருத்தினால்தான் கனிமவள முறைகேடுகளை தடுக்க முடியும். தவறுகள் நடந்தாலும் தெரிந்துகொள்ள முடியும். கனிமவளத்துறையை முழுமையாக டிஜிட்டல்மயமாக்க முதல்கட்டப்பணியை தொடங்கியுள்ளோம்.
சிவகங்கையில் கிடைக்கும் கிராபைட்டின் தரம் குறித்து சிக்ரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் புதிய கிராபைட் ஆலைகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும். தவெகவினருக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கியதாக கூறுவது தவறானது.
சட்டவிரோத வெடிமருந்துகளை பயன்படுத்தும் குவாரிகளுக்கு தடை விதிக்கப்படும். மேட்டூர் உள்ளிட்ட அணைகளை தூர்வாரி மணலை பயன்படுத்தும் விரிவான திட்டம் நீர்வள ஆதாரத்துறை அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.