தமிழகம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும்: விஹெச்பி

கி.மகாராஜன்

மதுரை: ‘மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு உடனடியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும்’ என தமிழ்நாடு விஹெச்பி வலியுறுத்தியுள்ளது.

தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் மதுரையில் இன்று கூறியது: “முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை கோயிலுக்கு சொந்தமானது. இதனால் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்துக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பெறப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிவிட்டது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களை முடித்து வைத்தது. இந்த உத்தரவால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

எனவே, தமிழக அரசு இனியாவது இதுபோன்ற இந்து விரோத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஒவ்வொரு திருக்கார்த்திகை திருநாளன்றும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற உடனடியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும்” என்று அவர் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT