சென்னை: தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் குழு அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோயில் நிலத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
ஆர்டர்லி முறையை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கலாம் என உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.
மேலும், அரசாணையை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.