தமிழகம்

பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அந்தவகையில் தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரம்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதச் சம்பளமாக ரூ.12,500 வழங்கப்படுகிறது.

          

இதற்கிடையே பகுதிநேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் கடந்த ஜனவரியில் தொடர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது பெரம்பலூரைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து ‘பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும். இதுவரை வழங்கப்படாத மே மாத ஊதியம் இனி குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில், ‘‘பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2026 ஜன,1-ம் தேதி முதல் ஊதியம் ரூ.2,500 உயர்த்தி ரூ.15 ஆயிரமாக வழங்கவும், மே மாதம் மட்டும் சிறப்பு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான தொடர் செலவினமாக ஆண்டுக்கு ரூ.44 கோடி நிதி ஒதுக்கவும் ஆணையிடப்படு கிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘தேர்தல் வாக்குறுதியின்படி தங்களை பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும்’ என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT