உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: கனிமவளக் குற்றங்களுக்கான அபராதத்தை குறைத்தும், தவணை முறையில் அபராதம் செலுத்தவும் வகை செய்யும் அரசாணையை திரும்பப் பெற அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் ஏபல் மூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கனிமவளத் துறை ஜன. 22-ல் சட்டவிரோத குவாரிகளுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு குவாரி செய்வது மற்றும் அனுமதியற்ற இடங்களில் குவாரி செய்வது என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.25 மட்டுமே அபராதமாக விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதுவும் அபராதத் தொகையை மொத்தமாக வசூலிக்காமல் முதலில் 20 சதவீதம் செலுத்தினால் போதும். எஞ்சிய 80 சதவீதத் தொகையை 6 தவணைகளாக செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. கனிமவளக் குற்றங்களில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் வகையில் அரசாணை உள்ளது. முன்பு கனிமவள முறைகேடுகளில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை பின்பற்றாமல் அபராதத்தை குறைத்தும், சலுகை வழங்கியும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் அரசாணையை திரும்பப் பெற கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அரசாணையை திரும்பப் பெறுவது தொடர்பாக உரிய முடிவெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நவ.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.