மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்
சென்னை: மத நிறுவனங்களை சம்பந்தப்பட்ட மதத்தினரே நடத்த அரசியலமைப்பு உரிமை அளிக்கும் நிலையில், இந்து மதத்துக்கு மட்டும் அந்த உரிமையை வழங்காமல் அரசு கட்டுப்படுவதாக மூத்த வழக்கறிஞர் பத்மஸ்ரீ சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 77-வது அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் அரசியலமைப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷன், நம்முடைய அரசியலமைப்பு சட்டம் எல்லா சட்டங்களுக்கும் தாயாக திகழ்வதாகவும், அத்தகைய அரசியலமைப்பை உறுதி செய்ய வழக்கறிஞர்கள் போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன் பின் பேசிய மூத்த வழக்கறிஞர் பத்மஸ்ரீ சி.எஸ்.வைத்தியநாதன், நமது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 77 ஆண்டுகள் கொண்டாடும் நிலையில், ராமாயணம், கம்ப ராமாயணத்தை பற்றி மனப்பாடமாக பேசும் தேர்ந்தவர்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளில் கூட நிறப்பாகுபாடு, பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மை, வாக்குரிமை மறுப்பு என பல அரசியமைப்பு பிரச்சினைகள் இருந்து வந்தன. ஆனால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போதே ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டதாகவும், சில நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில் கூட நம் நாட்டில் பெண் பிரதமராகவே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் நம் நாட்டின் பன்முக கலச்சாரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு நமது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதோடு, உலக அளவில் சிறந்த அரசியலமைப்பு என்றால் அது இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் என அவர் தெரிவித்தார்.
ஆனால், சமீபத்திய பத்தாண்டுகளில் நீதித்துறை வட்டாரங்களில் ஒரு கவலைக்குரிய போக்கு நிலவுவதாக சுட்டிகாட்டிய அவர், சட்டப்பிரிவுகள் 25, 26 ஆகியவை கலாச்சார, சமய மரபுகளுக்கு எதிரான கருவிகளாக கருதப்படுவதாக தெரிவித்தார். ஆனால் அச்சட்டப்பிரிவுகள் நமது கலாச்சார, சமய மரபை அழிக்கும் நோக்கத்தை கொண்டது அல்ல என்றார்.
மேலும் மத நிறுவனங்களிலிருந்து மதச்சார்பற்ற அதிகாரிகள் விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதையே அவை வலியுறுத்துவதாக தெரிவித்தார். கிழக்கிந்தியக் கம்பெனியும் பிரிட்டிஷாரும் சுமார் இரண்டு நூற்றாண்டுகள் கோயில்கள், மடங்களின் விவகாரங்களில் தலையிட்டதாகக் கூறிய அவர், அந்தத் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவரவே பிரிவு 26 வந்தது என்றார். சமய அமைப்புகள் தங்கள் நிறுவனங்களைத் தாங்களே நடத்த இது உரிமை தருகிறது.
ஆனால் மற்ற மத நிறுவனங்களுக்கு சுயாட்சி கொடுத்து விட்டு இந்துக் கோயில்களை மட்டும் அரசு கட்டுப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார். வழக்கறிஞர்கள் இதை புரிந்து கொண்டு நம் கலாச்சாரத்தை பின்பற்றி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை காக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் வட தமிழ்நாடு மாநில செயலாளர் பாபு, முன்னாள் உதவி சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன், தேசிய பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.