தமிழகம்

கோவை சிறுமி வழக்கில் போலீஸ் விசாரணை நிலவரம் என்ன? - உயர் நீதிமன்றத்தில் அரசு விவரிப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் பி.என்.எஸ். சட்டத்தின் கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்கு காவல் துறை மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்; இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கில் பரவிவரும் வீடியோக்கள் புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுவதால், இந்த வழக்கு தொடர்பாக செய்திகள் வெளியிட அனைத்து வகையான ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி.சொக்கலிங்கம் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்கக்களில் பல கருத்துகள் பரப்பப்படுகின்றன. அதனால் வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கக் கோருவதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “இந்த வழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது; மரபணு சோதனை முடிவுகளை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த வழக்கை நடத்துவதற்காக காவல் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சங்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்கில் விரைந்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விரைந்து நீதி கிடைக்க செய்யும்படி அவருக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.

மேலும், சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை நீக்க அமெரிக்காவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை கேட்டுள்ளதாகவும், வீடியோக்களை நீக்க குறைந்தபட்சம் 7 நாட்கள் ஆகும் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

அரசு குற்றவியல் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “இந்த வழக்கின் விசாரணையை கூடுதல் எஸ்.பி. கண்காணித்து வருகிறார். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.

பின்னர் நீதிபதிகள், “விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என காவல் துறைக்கு எப்படி உத்தரவிட முடியாது. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த மனு தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என கூறி, உத்தரவுக்காக வழக்கைத் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT