அமைச்சர் ப.வெங்கடரமணன்
சென்னை: தமிழகத்தில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு அங்காடிகளில் மலிவு விலையில் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ப.வெங்கடரமணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சன்ன ரக அரிசியின் வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துள்ளது.
அரசின் கையிருப்பில் உள்ள 1 லட்சம் மெட்ரிக் டன் சன்ன ரக அரிசியில், முதல்கட்டமாக 25,000 மெட்ரிக் டன் அரிசி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் இந்த அரிசியை, பொதுமக்கள் அதிகபட்சம் 5 கிலோ வரை வாங்கலாம். இந்த வார இறுதியில் விற்பனை தொடங்கும்.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து முதல்கட்டமாக 500 மெட்ரிக் டன் துவரம் பருப்பைக் கொள்முதல் செய்து, கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கும் அமுதம் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொன்னி புழுங்கல் அரிசி கிலோ ரூ.60-க்கும், உளுந்தம் பருப்பு ரூ.140-க்கும், பூண்டு மற்றும் தனியா தலா ரூ.240-க்கும், மிளகாய் ரூ.330-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
உணவு பொருள்களை பதுக்கி வைத்து செயற்கையாக விலையை உயர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க மாவட்ட அளவில் விலைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஓராண்டுக்குத் தேவையான அரிசி இருப்பும், சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் அடுத்த 3 மாதத் தேவைக்கான இருப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.