தமிழகம்

தங்கம் பவுனுக்கு ரூ.5,360 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றால், தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் (மே 12) ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 640 ஆக இருந்தது.

இந்நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.670 உயர்ந்து, ரூ.15 ஆயிரமாக இருந்தது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 912-க்கு விற்கப்பட்டது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.320 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, ரூ.3 லட்சத்து 20 ஆயிரமாகவும் இருந்தது.

விலை உயர்வு குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைரநகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘பெட்ரோல், டீசலுக்கு அடுத்ததாக தங்கம் இறக்குமதிக்கு அந்நியச் செலாவணி அதிகம் செலவிடப்படுகிறது. எனவே, அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் வகையில், ஓராண்டு காலத்துக்கு தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுதவிர, தங்கம் இறக்குமதி வரி 6-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT