கோப்புப் படம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த 13-ம் தேதி காலையில், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் ஏறினார்.
அப்போது, கையில் வைத்திருந்த பையை ரயில் பெட்டியில் மறந்து வைத்து விட்டு, விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இறங்கினார். பின்னர் பையை மறந்து வைத்து விட்டதை உணர்ந்த அவர், உடனடியாக ரயில்வே நிலைய அலுவலரிடம் தான் கொண்டு வந்த பையில் நகை இருப்பதாகவும், ரயிலில் தவற விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், ஆர்பிஎஃப் காவலர் ராம் கில்லாடி மீனா, திருவொற்றியூர் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த ரயிலில் ஏறி, அருணாச்சலம் தவறவிட்ட பையை மீட்டார்.
அதில், 64 கிராம் எடைகொண்ட நெக்லஸ், மோதிரம், வளையல், பிரேஸ்லெட், தங்க செயின் இருந்தது. இதையடுத்து, அருணாச்சலத்தை வரவழைத்த ஆர்பிஎஃப் போலீஸார், தங்க நகைகளை ஒப்படைத்தனர்.
ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் தங்க நகைகளை ஆர்பிஎஃப் போலீஸார் 15 நிமிடங்களில் மீட்டுள்ளனர். இதை மீட்ட ஆர்பிஎஃப் காவலரை உயரதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.