கோப்புப் படம் | எஸ்.கோபு
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள்.
தீபாவளியை முன்னிட்டு இந்த வாரம் வியாழக்கிழமை மதியம் முதலே ஆட்டுச்சந்தை தொடங்கி விற்பனை களைகட்டியது. அதில் வெள்ளாடு, கொடியாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது.
இதுகுறித்து சந்தை ஒருங்கிணைப்பாளர் கூறும்போது, “இன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையான நிலையில், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு ரூ.5 கோடிக்கு விற்பனையான நிலையில் தற்போது விற்பனை குறைந்துள்ளது. வியாபாரிகள் சிலர் கிடை அமைத்துள்ள இடத்துக்கே சென்று ஆடுகளை வாங்கி விடுவதாலும், புதிய சந்தைகள் வரவாலும் விற்பனை குறைந்திருக்கலாம்” என்றனர்.