மதுரையில் நடந்த தமாகா ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன்.

 
தமிழகம்

“ஆட்சி முடியும் நேரத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடும் திமுக” - ஜி.கே.வாசன் தாக்கு

செய்திப்பிரிவு

ஆட்சி முடியப் போகும் நேரத்தில் திமுக அரசு திட்டங்களை அறிவிப்பதும், புதிய அறிவிப்புகளை வெளியிடுவதும் மக்களை முகம் சுளிக்க வைத்திருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஆட்சி முடியும்போது புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது என, திமுக அரசு மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

          

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகா மதுரையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில், தேர்தலில் போட்டியிடு வோருக்கான விருப்ப மனு விநியோகமும் நடைபெற்றது.

முன்னதாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடித்தள பணிகளைத் தொடங்கியுள்ளோம். அதன்படி, பிப்.14-ம் தேதி கோவை, 17-ம் தேதி சென்னை, 19-ம் தேதி திருச்சி ஆகிய இடங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியினர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வரும் 25-ம்தேதிக்குள் சென்னை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக உள்ளனர். திமுக ஆட்சியில் மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வு, குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித் துள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதத்தை நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நேரத்தில் திமுக அரசு திட்டங்களை அறிவிப்பதும், புதிய அறிவிப்புகளை வெளியிடுவதும் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. விஜய் கட்சிக்கு எத்தனை சதவீத வாக்கு உள்ளது என்பது தேர்தலில் தான் தெரியும். எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT