ஜி.கே.வாசன்
பெரம்பலூர்: “மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிக்கு கர்நாடக அரசு தாமாக முன்வந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுதான் இரு மாநில விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டு திருமண நிகழ்வில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இந்தியா முழுவதும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஒரு தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இனி வரும் நாட்களில் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகள் தமிழகத்துக்கு நல்ல பலன் தரும் என்று நம்புகிறேன்.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுந்தகவல் அனுப்பிய விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், சந்தேகங்களுக்கு ஆளுங்கட்சி உரிய முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இறந்தவரின் மரணத்தில் தேவையற்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, சர்ச்சையோ வேண்டாம்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கதக்கது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு திரித்துப் பேசக்கூடாது. விவசாயிகளை மாநில வாரியாகப் பிரித்துப் பார்க்காமல், மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். கூட்டாட்சிச் தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாகத் கர்நாடக அரசு திகழ வேண்டும்.
காவிரி மேலாண்மை உத்தரவை கர்நாடக அரசு மீறக் கூடாது. உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய நீரை முறைப்படுத்தி வழங்க வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிக்கு கர்நாடக அரசு தாமாக முன்வந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது இரு மாநில விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும்” என்று அவர் தெரிவித்தார்.