இபிஎஸ் உடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, அங்கிருந்த கட்சியினரை தவிர்த்து விட்டு இருவர் மட்டும் சுமார் 45 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா-வுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டி பழனிசாமியிடம் ஜி.கே.வாசன் வலியுறுத்தியதாக தகவல் கசிந்துள்ளது.
இதுகுறித்து சேலம் அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமாகா-வுக்கு 6 சீட் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக-வுடனும் பாஜக-வுடனும் நல்லுறவைப் பேணி வரும் ஜி.கே.வாசன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையுடனே எங்கள் பொதுச் செயலாளரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
பொதுச் செயலாளருடனான பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்தில் 4 மண்டலங்களிலும் பரவலாக தமாகா வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற முனைப்பை ஜி.கே.வாசன் காட்டியுள்ளார்.
இதன்படி, தஞ்சை, அரியலூர், திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தனது தீவிர ஆதரவாளர்களுக்காக வரும் தேர்தலில் 12 சீட்களை ஒதுக்க வேண்டும் என எங்கள் பொதுச்செயலாளரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சி தலைவர்களுடன் பேச வேண்டும் என்பதால் ஜி.கே.வாசனின் கோரிக்கையை மறுத்துப் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் பொதுச்செயலாளர்.
கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத நிலையில், இம்முறை 12 தொகுதிகளைக் கேட்கிறது. வாசன் கேட்ட 12 தொகுதிகளை அதிமுக தர யோசித்தால் அடுத்ததாக பாஜக தலைவர்களிடமும் பேசி தனக்கானதை சாதிக்க நினைப்பார் வாசன்” என்றனர்.