ஜி.கே.வாசன்
கும்பகோணம் தொகுதி தமாகா வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில், ஜி.கே.வாசன் பேசியதாவது: கும்பகோணம் ஆன்மிக தொகுதி என்பதால், திமுக அரசும், எம்எல்ஏவும் இந்தத் தொகுதியை ஒதுக்கி வைத்திருக்கின்றனர். கும்பகோணத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த நினைக்கின்றனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதே நிலை தொடரும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் பழனிசாமி முதல்வராக இருந்தபோது மக்கள் விரும்பும் முதல்வராக எளிமையின் இலக்கணமாக அவர் திகழ்ந்தார். அமைச்சர்களை எளிதில் சந்திக்க முடிந்தது. அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டனர். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்தது.
மத்தியில் பிரதமர் மோடி நல்லரசாக நடத்தி வருகிறார். வரும் ஆண்டுகளில், இந்தியாவை வல்லரசாக மாற்றுவார். அதற்கு துணையாக தமிழகம் வளர வேண்டுமெனில் தமிழக முதல்வராக பழனிசாமி வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.