சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
“அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு (மூப்பனார்) ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய ஐந்து தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தமாகா, ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்த ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து பணியாற்றுவோம். இந்த தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி பேசி எடுக்கப்பட்ட ஒருமித்த கருத்தாகும். தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு இணக்கமாக தமாகா வரமுடியாத நிலையில் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் காரணமாக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்றார்.
இதே கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் பொது தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.