ஜி.கே.மணி

 
தமிழகம்

“அன்புமணிக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை” - ஜி.கே.மணி ஆவேசம்

த.சக்திவேல்

சேலம்: “பாமகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத அன்புமணிக்கு, என்னை நீக்க அதிகாரம் இல்லை” என ஜி.கே.மணி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் நேற்று மனு அளித்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பை மீறி அன்புமணி ஆதரவாளர்கள் பொய்யான புகார் மனுவை வழங்கியதாகவும், பொய் புகார் வழங்கிய நபர்கள், அவர்களை தூண்டிவிட்ட அன்புமணி மீதும் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க கோரி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் இன்று சேலம் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும் அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் ராமதாஸ் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, திண்டிவனத்தில் இருந்து கார் மூலமாக ஜி.கே.மணி இன்று மதியம் சேலம் வந்தார். பின்னர், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியது: “பாமக என்றால் ராமதாஸ் ஐயா மட்டும் தான். கட்சி ஆரம்பத்திலிருந்து உடன் இருக்கிறோம். 46 ஆண்டு காலம் ராமதாஸ் உடன் பயணிக்கிறேன். 25 ஆண்டு காலமாக கட்சியில் தலைவராக இருக்கிறேன். இதுபோன்ற செய்தி வருகிறது என்றால் சிரிக்கிறதா, என்ன செய்வது என்ன சொல்வது என்று தெரியவில்லை.

மனிதப் பண்பு உள்ள மனிதர்களுக்கு இதுபோன்ற சிந்தனை வருமா? அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்சியில் பொறுப்பிலும், பதவியிலும் இல்லை. அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் இருக்கும் ஒருவர் என்னை எப்படி கட்சியிலிருந்து நீக்க முடியும். அன்புமணிக்கு யாரையும் நீக்குவதற்கு அதிகாரம் இல்லை. நீக்குவதற்கு, சேர்ப்பதற்கு, பொறுப்பு கொடுப்பதற்கான அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது.

எனது பெயரை, என் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை ராமதாஸ் கூறுகிறார். இதற்கு மேல் என்ன அதிகாரம் தகுதியும் அன்புமணிக்கு இருக்கிறது. தகுதியே இல்லாத ஒருவர் நீக்கியதாக கடிதம் பார்த்ததாகவும், கையெழுத்து இல்லாமல் இருப்பதாக சிலர் கூறியுள்ளார்கள். இதனை பெரிதாகவும், பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

பாமகவில் சேர வேண்டும் என்றால் ராமதாஸ் ஐயாவை நேரில் சென்று பாருங்கள், அவர் சேர்த்துக்கொண்டால் கட்சியில் இருங்கள், சேர்ப்பாரா என்று தெரியவில்லை. அன்புமணி என்பவர் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். எப்பொழுது கட்சிக்கு வந்தார். எவ்வளவு நாட்களுக்கு முன்பு வந்தார். அவருக்கு முன்பு இருந்து கட்சியில் இருக்கிறோம், இரவு பகல் பாராமல் ராமதாஸுடன் ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறோம். மனதார, வேதனையுடன் மனம் நொந்து சொல்கிறேன். அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று சண்டை போட்டு வாதாடியவன் நான். தற்போது பாமகவின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும்.

பாமக வலிமையான கட்சி. தற்போது வலிமையாக உள்ளதா என சொல்ல முடியுமா? நிலைகுலைந்து போய்விட்டது. தற்போது தலைகீழாக நிலை மாறிக் கொண்டிருக்கிறது. ராமதாஸ் கை ஓங்கிக் கொண்டிருக்கிறது. அன்புமணி ஏன் இவ்வாறு செய்கிறார் என அனைவரும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை எந்த கட்சியுடனும் பேச துவங்கவில்லை. செயற்குழு, பொதுக்குழுக்கு முன்பாக நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கையுடன், எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நல்ல செய்தியை அறிவிப்பார். செயற்குழு, பொதுக்குழுவும் திட்டமிட்டபடி நடக்கும். முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது” என்றார் ஜி.கே.மணி.

SCROLL FOR NEXT