சென்னை: ‘‘தமிழகத்தில் காங்கிரஸ் இனி ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில்தான் இருக்கும்’’ என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளிவர உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்துக்கான தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இனி காங்கிரஸ் கட்சி ஆட்சி, அதிகாரம் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில்தான் இருக்கும். இனி அதிகாரமற்ற நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம்.
நடுநிலையாக அங்கம் வகிக்கும் காலம் முடிந்துவிட்டது. மே 4-க்குப் பிறகு கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்புகளும் மாற்றியமைக்கப்படும். அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிட்டுள்ளது.
எனவே, ஏற்கெனவே வென்ற இடங்களைத் தக்கவைப்பதோடு, புதிய தொகுதிகளைக் கைப்பற்றுவதற்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி.
தற்போது காங்கிரஸுக்குப் புத்துயிர் கொடுப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கப் போகிறோம். இதற்காக கிராம அளவிலான கமிட்டிகள் மற்றும் பூத் கமிட்டிகளைப் பலப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
அடுத்து வரும் உள்ளாட்சித்தேர்தலில் மிக வலுவான போட்டியைத் தரத் திட்டமிட்டுள்ளோம். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எங்கள் உரிமைகளை முறைப்படி கேட்டுப் பெறுவோம்.
ஆட்சியில் பங்கு அல்லது எதிர்க்கட்சி என்று ஒரு தெளிவான முடிவை எடுத்தால்தான் தமிழகத்தில் காங்கிரஸை அடுத்த கட்டத்துக்கு வளர்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஆட்சியில் பங்கு என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து சர்ச்சையானது. இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.