சென்னை: “எங்களை நீங்கள் தாக்க நினைத்தால் தாராளமாகத் தாக்குங்கள், ஆனால் வாக்களித்த தமிழக மக்களைத் தாக்காதீர்கள்” என திமுகவினருக்கு தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “எங்களை நீங்கள் தாக்க நினைத்தால் தாராளமாகத் தாக்குங்கள், ஆனால் வாக்களித்த தமிழக மக்களைத் தாக்காதீர்கள். எங்களை விமர்சிக்க ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு. அதற்காக நாங்கள் ஒருபோதும் ஆத்திரப்பட மாட்டோம்.
ஆனால் தமிழக மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்கவோ அவமதிக்கவோ கூடாது. தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி உடையவர்கள்; அவர்கள் புத்திக் கூர்மையுடனும் தெளிவுடனும் வாக்களிப்பவர்கள். எங்களது தலைவர்கள் அல்லது எங்களது கட்சிக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கக் கூடாது என்று நாங்கள் விழிப்புணர்வுடன் முடிவு செய்தோம்.
நாங்கள் நினைத்திருந்தால், ஒரு தசாப்த காலமாக முக்கிய அமைச்சரவை பதவிகளையும் அதிகாரத்தையும் அனுபவித்துவிட்டு, 2014 மக்களவைத் தேர்தலில் இழைக்கப்பட்ட மாபெரும் துரோகத்தை அனைவருக்கும் நினைவூட்டியிருக்க முடியும். ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை.
தமிழக வரலாற்றில் அவர்கள் (திமுக) ஒருபோதும் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை (தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைத்ததில்லை) என்பதை நன்றாக அறிந்திருந்தும், எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தபோதிலும் அந்த கூட்டணியில் இணைந்தோம். மக்களின் தீர்ப்பை பணிவுடனும் பெருந்தன்மையுடனும் மதிப்பதே எங்கள் கோட்பாடு'' எனத் தெரிவித்துள்ளார்.
புதிய மாற்றத்தை விரும்பினர்
இதேபோல் கிருஷ்ணகிரி முன்னாள் எம்பி செல்லகுமார், “அவர்கள் தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் தரம் தாழ்ந்து போய்விட முடியாது. ஒவ்வொருவரும் தங்களுடைய ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் வார்த்தைகளாக வெளிப்படுத்துவார்கள்.
ஆகவே தரம் தாழ்ந்து பேசும் மனிதர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. மக்கள் மாற்றத்தை வேண்டும் என வாக்களித்திருக்கிறார்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த தவறுகள், அரசியல்வாதிகளின் அராஜகம் ஆகியவற்றைக் கண்டித்து புதிய மாற்றத்துக்காக மக்கள் விரும்பினார்கள்.
யாராக இருந்தாலும் இதை ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அரசியல் இயக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
திமுக ஆட்சி மீதான அதிருப்திதான் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடையக் காரணமாக இருந்தது. அந்த ஆட்சி மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள்தான் மக்கள் கொந்தளித்து வருவதற்கு காரணமாக இருந்தது.
ஆனால் பாஜக எந்த விதத்திலும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தோம். அதனால் அதிகாரத்தில் எங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் எந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருந்தார். நாளைக்கு அவர் காங்கிரஸில் வந்து ஐக்கியமானால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் திமுக தலைவர்களின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.