விழுப்புரம்: செஞ்சி அருகே சிறுமி மாயமான விவகாரத்தில் 2-வது நாளாக விசாரணையைத் தொடர்ந்துள்ள சிபிசிஐடி போலீஸார், சிறுமியின் தாயையும் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்ளிரவு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்பி மதிவாணன் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
10 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்காததால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த 21-ம் தேதி இரவு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து எஸ்பி ஜவகர் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார், நடுப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கினர். 2-வது நாளாக நேற்றும் விசாரணையைத் தொடர்ந்தனர். சிறுமியை திட்டமிட்டு கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் தாய் பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணில் பதிவான அழைப்புகளின் எண்கள் அடங்கிய பட்டியலை தனிப்படை போலீஸாரிடம் முதல்கட்டமாக பெற்றுள்ளனர். இதில் அடிக்கடி பேசியவர்கள், நீண்ட நேரம் பேசியவர்களின் விவரம் குறித்து சிறுமியின் தாயிடம் விசாரித்துள்ளனர். மேலும், சிறுமியின் தாய் மீதும் சந்தேகம் எழுந்ததால், அவரை தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை வரை செல்லும் சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பெற்றுள்ளனர்.
இதனிடையே, விழுப்புரத்தில் மாவட்ட எஸ்பி மதிவாணனை சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் சேகரித்த தடயங்கள், தகவல்களை தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். சிறுமி மாயமான வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.