சென்னை: முதல்வர் விஜய்யின் பொதுத்துறை அறிவிப்புகளை வெளியிட்டு, அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு பேசியதாவது: முதலமைச்சரின் உதவி மைய இணையதளத்தில் குறைதீர் மனுக்களை பதிவு செய்தல், மனுக்களின் நிலையை கன்காணித்தல், மனுக்களின் மீது
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்டறிவதில் பொது மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அதனால், முதலமைச்சரின் உதவி மைய இணையதளத்தில் செயற்கை நுண்ணறிவு திறனுடைய சாட்பாட் மற்றும் உரையாடும் வாய்ஸ்பாட் சேவை அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கப்படும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், சென்னை தலைமை செயலகத்திலும் டிஜிட்டல் கியோஸ்க்குகள் நிறுவுவதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பணக்கொடையினை மேலும் உயர்த்தி குடும்ப தலைவருக்கு ரூ.1,800 ஆகவும், குடும்பத்திலுள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,200 ஆகவும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.600 ஆகவும் வழங்கப்படும்.
முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி படிக்க வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை அனைத்து படிப்புகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் உயர்த்தப்படும்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக பொதுநல நோக்கில் உதவிகளை செய்து வரும் அயலக தமிழர்களுக்கு ‘வெற்றித் தமிழர் விருது’ என்ற புதிய விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உடனடி உலகளாவிய ஐஜிஎம் என்ற தளம் உருவாக்கப்படும். இளைஞர்களுக்கு இலவசமாக ஜெர்மன் மொழிப்பயிற்சி அளிக்கப்படும்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.