தமிழகம்

பாஜக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகார் மீது நடவடிக்கை: பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பதவி நீக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக பாஜகவிலிருந்து தமிழகத்துக்கு வந்து, 2024 முதல் திருச்சியில் வசித்துவரும் தமிழக பாஜக பெண் நிர்வாகி ஒருவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கர்நாடக பாஜகவில் பணியாற்றி வந்த என்னை, கருப்பு முருகானந்தம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். எனது குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ்களில் பாதுகாவலராகத் தன் பெயரைச் சேர்த்து, தன்னை ‘டாடி' என்று குழந்தைகளை அழைக்க வைத்தார்.

மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கம் தொகுதியில் சீட் வாங்கித் தருவதாகவும் உறுதியளித்தார். அவரது பேச்சை நம்பி, பெங்களூருவில் இருந்து குழந்தைகளுடன் திருச்சிக்கு வந்தேன்.

ஆனால், இங்கு என்னை அவர் உடலளவிலும், மனதளவிலும் மிகக் கடுமையாகத் துன்புறுத்தினார். அவருடனான உறவில் நான் கருவுற்ற நிலையில், எனது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க வைத்தார்.

தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள எனது சொந்த வீட்டை மோசடியாகக் கைப்பற்ற முயன்றதுடன், இதுபற்றிக் கேட்டதற்கு எனக்கும் என் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பான மின்னணு ஆதாரங்கள், ஆடியோக்கள் மற்றும் சாட்சிகளை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் வழங்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்தப் புகாரை தொடர்ந்து, மாநிலப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கருப்பு முருகானந்தத்தை நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு கருப்பு முருகானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

புகாருக்கு மறுப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொடங்கி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் எவ்விதப் புகாருமின்றி நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகிறேன்.

இந்நிலையில், எவ்வித முறையானவிசாரணையும் நடத்தாமல், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என்னைப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகாரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது’’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT