தமிழகம்

ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைதாகியுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணி உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் இருவருரையும் முன்று நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் எடுத்து விசாரித்த வீரமணி அளித்த தகவலின் பெயரில் இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இன்னும் எத்தனை சிறுமிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு நாட்களாக குற்றம் நடந்தது, வேறு யார் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.

எனவே, இருவரையும் மூன்று நாட்கள் தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கபட்டது.

இந்த மனு நீதிபதி பத்மா முன்பு இன்று மாலை விசாரணைக்கு வந்தபோது, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இருவரையும் வரும் ஞாயிற்றுகிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பின்புலம் என்ன?

பணம், செல்போன், பரிசுப் பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்து சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, ‘ஜெம் கிரானைட்​ஸ்’ நிறு​வனர் ஆர்​.வீரமணி (84) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ மூலம் இந்த தகவல் வெளியானது.

குறிப்பாக, இவர் ஏழ்மை மற்றும் ஆதரவற்ற சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இவரால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் நாள்தோறும் ஒவ்வொரு தகவல்களாக வந்தவண்ணம் உள்ளன.

சென்னை தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் ஜெம் வீரமணி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் வீரமணியின் தேனாம்பேட்டை வீட்டை கவனித்து வந்த அவரது உதவியாளர்கள் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்தான் அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT