சென்னை: தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில், திடுக்கிடும் பின்னணி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பண பலமும், அதிகார பலமும் குற்றவாளிகளை எப்படி காப்பாற்ற முயன்றன என்பதையும், தற்போது இந்த வழக்கில் காவல்துறையின் உயரதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்பு குறித்தும் அதிர்ச்சித் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வீடியோ ஆதாரம்: குழந்தை உரிமை ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் கீழ் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவில் பென் டிரைவ் ஒன்றை கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி ஒப்படைத்தார். அதில் இடம்பெற்றிருந்த 2019-ம் ஆண்டின் சிசிடிவி காட்சிகள் காவல்துறையையே உலுக்கின.
13 வயது சிறுமி ஒருவரை, முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர காட்சி பதிவாகியிருந்தது. அவர் பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத் தலைவருமான ஆர்.வீரமணி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப் பிரிவு பாலியல் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் மறுநாளே வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தக் கொடூரச் செயலுக்கு, சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது கணவரும் ஜெம் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள் மற்றும் பங்களாக்கள் பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மகேந்திர சிம்கன்
நீதிமன்றத்தின் அதிரடி: பென் டிரைவ் போன்ற வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், குற்றவாளி தொழிலதிபர் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் தொடக்கத்தில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், புகாரில் வலுவான ஆதாரம் இல்லை என்றும் கூறி 2026 பிப்ரவரி மாதத்தில் இந்த வழக்கினை முடித்துவைக்குமாறு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற காவல்துறையின் முயற்சியை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கடுமையாக எதிர்த்தார். “வீடியோ ஆதாரம் இருந்தும் குற்றப் பின்னணியை எப்படி கண்டுபிடிக்க முடியவில்லை?” என்று கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், வழக்கினை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. நீதித்துறையின் இந்த அதிரடித் தலையீடு வழக்கின் போக்கையே முழுமையாக மாற்றியது.
அறக்கட்டளை பெயரில் கொடூரம்: விசாரணை தீவிரப்படுத்தப்பட்டபோது, வீரமணியின் கொடூரச் செயல்கள் குறித்து பல உண்மைகள் வெளிவந்தன. அதாவது, போயஸ் கார்டன் அருகே ரூ.2 லட்சம் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு பங்களாவில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
அங்கு மட்டும் அல்லாமல் சிறுமிகளை தனக்கு சொந்தமான வீடு, அலுவலகம், சொகுசு பங்களாவுக்கும் வீரமணி வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஏழ்மையான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவுவது போல் ஒரு அறக்கட்டளையை வீரமணி நடத்தியுள்ளார். ஏழ்மையைச் சாதகமாகப் பயன்படுத்தி, கல்வி உதவி வழங்குவதாகக் கூறி சிறுமிகளை அந்தப் பங்களாவுக்கு வரவழைத்துள்ளனர்.
சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் தம்பதியினர் அந்தச் சிறுமிகளுக்கு மதுபானம் கொடுத்து, மிரட்டி வீரமணிக்கும் அவரது தொழிலதிபர் நண்பர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் விருந்தாக்கியுள்ளனர். பணம் மற்றும் ஆடம்பர பரிசு பொருட்களை அள்ளிக் கொடுத்தும் அந்தச் சிறுமிகளை தங்களது இச்சைக்கு இணங்க வைத்துள்ளனர்.
ரூ.50 கோடி லஞ்சம்? - இந்த விவகாரம் கசிய தொடங்கிய உடன், காவல்துறையைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் வீரமணியை மிரட்டி ரூ.50 கோடிக்கு மேல் லஞ்சமாகப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணத்தை கொடுக்க வீரமணி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சொத்து உள்பட சில சொத்துகளை குறைந்த விலைக்கு விற்று பணத்தை திரட்டி லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.
இதில் சில இடைத்தரகர்கள் கைகோத்துச் செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கும் அதில் ஒரு பகுதியாக கோடிக்கணக்கில் கமிஷனாக பணம் கைமாறியுள்ளது. இதனால், அந்த இடைத்தரகர்களும் காவல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில் சென்னை காவல் துறையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளான வீரமணியைத் தப்ப வைக்க எந்த வகையில் எல்லாம் முயன்றனர். அதில் அவர்களின் பங்கு என்ன? அதனால், அடைந்த பயன்கள் என்ன? என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அவர்கள் உத்தரவுக்கிணங்க செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் விரைவில் சம்மன் அனுப்பி, வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முதல்வர் ஆலோசனை: இந்த விவகாரத்தில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோரை அழைத்து முதல்வர் விஜய் ஆலோசித்துள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், விசாரணை மேலும் வேகம் எடுத்துள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ள முகாந்திரம் உள்ளதால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் விரைவில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியல் கொடூரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றான தேனாம்பேட்டை வீடு.
விரைவில் குற்றப்பத்திரிகை: வீரமணிக்கு எதிரான வழக்கில் சிறையில் உள்ள சாந்தியே, வீரமணிக்கு எதிராக புகார்களையும் ஆதாரங்களையும் அளித்து வருகிறார். இதன் அடிப்படையில், போலீஸார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.
மேலும் 9 பேர் வாக்குமூலம்: விசாரணையின் ஒரு பகுதியாக எழும்பூர் நீதிமன்ற அனுமதியுடன் புழல் சிறையிலேயே வீரமணியிடம் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் தனது செயல்கள் தொடர்பாகவும், தன்னை எப்படி எல்லாம் குறிப்பிட்ட சிலர் மிரட்டி பணம் பறித்தார்கள் என்பது பற்றியெல்லாம் போலீஸாரிடம் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸாரிடம் அச்சம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பெற்றுக் கொண்ட போலீஸார், அதை அடிப்படையாக வைத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அவர்களை மிரட்டி பணம் பறித்த போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் என தனித்தனி பெயர் பட்டியலை தயார் செய்துள்ளனர்.
இதில், ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்பு, அவர்களின் சொத்து பட்டியல், அதிகாரத்தை எவ்வாறெல்லாம் தவறாக பயன்படுத்தினார்கள் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வீரமணி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது மேலும் 9 பேர் தாங்கள் சிறுமிகளாக இருந்த போது வீரமணியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர். இவர்கள் ரகசிய வாக்குமூலமும் அளித்துள்ளனர். வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ரகசிய அறைகள், மது விருந்து: வீரமணி தனது அலுவலகம், வீடு மற்றும் அடிக்கடி செல்லும் இடங்களில் தனிச்சொகுசு அறைகளை ரகசியமாக அமைத்துள்ளார். இங்கு அடிக்கடி சிறுமிகளும், பெண்களும் வந்து சென்றுள்ளனர். மேலும், அவரது நண்பர்கள், தொழிலதிபர்கள், பங்குதாரர்கள், போட்டியாளர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். அவர்களுக்கு அடிக்கடி மது விருந்து அளித்துள்ளார். அப்போது, அவர்களது ஆசைக்கிணங்க சிறுமிகள் மற்றும் பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளாக நடந்த கொடுமை: குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்வதை வீரமணி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சாந்தியே, தற்போது வீரமணிக்கு எதிராக திரும்பி பல தகவல்களையும், புகார்களையும் அளித்து வருகிறார். அவர் வீரமணிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றில் கடந்த 2003-ம் ஆண்டு ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் நினைவிருக்கிறதா? என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீஸார் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
இன்னொரு ‘ஜெஃப்ரி எப்ஸ்டீன்’ - அமெரிக்காவில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற தொழிலதிபர், உலக அளவிலான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு பாலியல் விருந்தளிக்க ஒரு தனித் தீவையே விலைக்கு வாங்கி அங்கு சிறுமிகள் மற்றும் பெண்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.
இந்த எப்ஸ்டீனின் வழக்குத் தொடர்பாக, புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், மின்னஞ்சல் உட்பட பல லட்சக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பொதுவெளியில் விடப்பட்டன. குறிப்பாக, முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அதிபர் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரு, தொழிலதிபர்கள் பில்கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்சன், அனில் அம்பானி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் பெயர்கள், புகைப்படங்கள் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எப்ஸ்டீன் ஜூலை 2019-ல் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதேநிலை வீரமணிக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். அவர் மூலம் பல்வேறு அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வீரமணிக்கு சிறையில் உரிய உயர்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
குழந்தைகள் மீது கவனம் தேவை:
சிறுமிகளுக்கு நடைபெறும் பாலியல் கொடூரங்கள் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை பேராசிரியர் மருத்துவர் பூர்ண சந்திரிகா கூறியதாவது: குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை தடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு “குட் டச் - பேட் டச்” மட்டும் சொல்லி கொடுக்கின்றனர்.
குழந்தைகளுக்கு அது மட்டும் போதாது. தனக்கு நடப்பது தவறானது என்பதை குழந்தைகள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதனை பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்ற சிந்தனை குழந்தைகளுக்கு வரவேண்டும். குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.
படிப்பில் கவனம் குறைந்தல், சரியாக தூங்காமல் இருப்பது, காரணம் எதுவும் இல்லாமல் அழுவது, தனியாக இருப்பது போன்ற மாற்றங்கள் இருந்தால், குழந்தைகளிடம் அன்போடும், பாசத்தோடும் பேச வேண்டும். தங்களுக்கு எது நடந்தாலும் தைரியமாக சொல்வதற்கு பெற்றோர் மீது குழந்தைகளுக்கு நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கை குழந்தைகளிடம் வரும்படி பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளிடம் மாறுதல் இருப்பதை ஆசிரியர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆசிரியர்களும் குழந்தைகளிடம் கேட்கலாம். பெற்றோரிடமும் தகவலை தெரிவிக்கலாம். யாரென்று தெரியாதவர்களைவிட நன்கு தெரிந்தவர்கள் தான் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்கின்றனர். அதனால், பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.