நாமக்கல்: வாடகை நிலுவை தொகையை வழங்கக் கோரி, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று காலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி.காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தில் 4,500 காஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் மத்திய அரசுக்குச் சொந்தமான ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் எரிவாயுவை ஏற்றிக் கொண்டு பாட்டிலிங் மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
இதில், 1,000 எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் ஐஓசி நிறுவனத்துக்காக (இந்தியன் ஆயில் நிறுவனம்) இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வாடகை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வாடகை நிலுவையை வழங்கக் கோரி நேற்று காலை முதல் ஐஓசி நிறுவனத்துக்கு இயக்கப்படும் காஸ் டேங்கர் லாரிகளில் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனிடையே, ஐஓசி அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2 நாட்களில் வாடகை நிலுவைத் தொகை வழங்குவதாக உறுதியளித்தனர். இதை ஏற்று, டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று மாலை வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.