மதுரை: ஒட்டுமொத்த மாநகராட்சி பொறியியல், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், பணியாளர்களும், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி முகாமிட்டு பணிபுரிந்து வருவதால், பிற வார்டுகளில் மழைநீர், கழிவுநீர், குப்பை தேக்கமடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ‘அவர்லேண்ட்’ ஒப்பந்த நிறுவனம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், தூய்மைப் பணியை சரியாக மேற்கொள்ளாததால் அதன் ஒப்பந்தத்தை நீட்டிக்கக் கூடாது, ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த திமுக ஆட்சி முதல் தற்போது வரை மக்கள் அனைவரும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகிறார்கள்.
கடைசி மாநகராட்சி கூட்டத்தில், 100 வார்டுகளின் கவுன்சிலர்களும், ‘அவர்லேண்ட்’ ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமாரிடம் வலியுறுத்தினர்.
மேலும், அதற்கு முன்பாக, மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாநகராட்சி பொறுப்பு செயலாளர் நாகராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ‘அவர்லேண்ட்’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பெரிய போராட்டம் நடந்தது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை, தவெக எம்எல்ஏ-க்கள் கல்லாணை (வடக்கு தொகுதி), தங்கபாண்டியன் (மேற்கு) போன்றவர்கள் குப்பை கிடக்கும் இடங்களையெல்லாம் தேடி கண்டுபிடித்து அதற்கு முன்நின்று ‘ரீல்ஸ்’ போட்டு ‘அவர்லேண்ட்’ நிறுவனத்துக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் நெருக்கடி கொடுத்தனர்.
தற்போது, தவெக எம்எல்ஏ, அமைச்சர் யாரும், மாநகராட்சி தூய்மைப் பணி ஒப்பந்தத்தை பற்றியும், குப்பை பிரச்சினை பற்றியும் வாய் திறப்பதில்லை. மேலும் அந்த நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 100 வார்டுகளிலும் குப்பை சரியாக அள்ளப்படாமல் மக்களிடம் பதில் சொல்லவும் முடியாமல் கவுன்சிலர்கள் குமுறுகிறார்கள்.
இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழா நாளை (செப்.17) நடக்கிறது. இதற்காக கடந்த 2 வாரமாக, ஒட்டுமொத்த மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, பொறியியல் பிரிவு பணியாளர்களை, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி மாநகராட்சி நிர்வாகம் களம் இறக்கியுள்ளது. இதனால் பிற வார்டுகளில் நிலவும் சுகாதார சீர்கேடு பிரச்சினைகளை பற்றி மாநகராட்சி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறியது: “அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்றும், சாலைகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அவர்களை கண்காணித்து, சேகரிக்கும் குப்பைகளையும், தேங்கிய குப்பைகளையும் அள்ளி உரக்கிடங்குக்கு அனுப்ப மேற்பார்வை செய்யும் சுகாதார ஆய்வாளர்களுக்கு கோயில் பணிகளை ஒதுக்கியுள்ளனர். ஏற்கெனவே ‘அவர்லேண்ட்’ மேற்பார்வையாளர்கள் தூய்மைப் பணியை முழு கவனத்துடன் கண்காணிப்பதில்லை. அதனால், வார்டுகளில் குப்பை தேக்கமடைந்து மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது.
அதுபோல், சாக்கடை கழிவு நீர் அடைப்பு, பிற பணிகளுக்கு பொறியியல் பிரிவு அதிகாரிகளை கவுன்சிலர்கள் அழைத்தால், அவர்களும் தங்களுக்கு கோயில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இரவு, பகலாக மாநகராட்சியின் ஒட்டுமொத்த அதிகாரிகளும், மீனாட்சியம்மன் கோயில் பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.
திருவிழாவை நடத்தும் இந்து சமய அறநிலையத் துறையினர் கூட, கோயில் பகுதிகளில் விழா ஏற்பாடுகளில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
சித்திரைத் திருவிழா போன்ற 15 லட்சம் பக்தர்கள் திரளும் விழாக்களிலேயே, கடந்த காலத்தில் மாநகராட்சி சிறப்பு பணிக்கு தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை எடுத்து கோயிலை சுற்றி குப்பை தேங்காமல் சுகாதாரமாக விழாக்கள் நடத்தப்பட்டன.
ஆனால், தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே கோயிலுக்குள் ‘பாஸ்’ கொடுத்து அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்கு மாநகராட்சியின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும் அளவுக்கு, ஒட்டுமொத்த அலுவலர்கள், பணியாளர்களை கோயில் பணிக்கு நியமிப்பது ஆச்சரியமாக உள்ளது” என்று கூறினர்.