தமிழகம்

செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - அண்ணாமலை, டிடிவி தினகரன் கடும் கண்டனம்

மோகன் கணபதி

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அண்ணாமலை, டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது. இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது. இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும். இத்தகைய மோசமான சூழலில் தமிழகத்தை திமுக ஆட்சி இன்று தள்ளியிருக்கிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “செய்யாறு அருகே சுப நிகழ்வில் பங்கேற்க வந்த 15 வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவோ, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுகவின் அலட்சியத்தை அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களே தோலுரித்துக் காட்டுகின்றன.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் என்ற பெருமையைப் பெற்ற தமிழகம், திமுகவின் கடந்த ஐந்தாண்டுக்கால இருண்ட ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக மாறியிருக்கிறது.

எனவே, கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குரூர மனம் படைத்த அனைவரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தன் பாட்டி வீட்டிற்கு திருவண்ணாமலை சென்ற போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து வருட திராவிட மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருவதை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில், மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது திமுக அரசின் தோல்வியை, நிர்வாகமின்மையை தோலுரித்து காட்டுகிறது.

நடைபெற்ற சம்பவத்திற்கு காரணமான தீயசக்திகளை உடனடியாக கைது செய்வதோடு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டியது காவல்துறையின் கடமை.

இப்போதாவது, தன்னை ‘அப்பா’ என்றழைத்து பெருமைப்பட்டுக்கொள்ளும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழ் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு தன் அரசின் தோல்வி மற்றும் நிர்வாகமின்மை தான் காரணம் என்பதை உணர்ந்து, ஒப்புக்கொண்டு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா?” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT